அமமுகவில் சாக்லேட் கொடுத்து வைத்திலிங்கத்தை கூப்பிடுகிறார்கள்: ஜெயக்குமார் கலாய்!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகார பூதாகரமாகியுள்ள நிலையில், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ள ஓபிஎஸ், சசிகலாவை நேரில் சென்று சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மட்டுமல்ல அதிமுகவில் யார் வந்தாலும் சந்திப்பேன் என

தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஒ.பன்னீர்செல்வத்திற்கு வலது கரமாக செயல்படும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இன்று சசிகலாவை சந்தித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவரப்பட்டு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சசிகலாவை வைத்திலிங்கம் சந்தித்து பேசினார். வைத்திலிங்கத்துக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவருக்கு இனிப்பு வழங்கி சசிகலா வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என கோரி டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “திருக்கோவிலாக இருக்கிற அதிமுக அலுவலகத்தை ஓபிஎஸ் மற்றும் ஆதரவளார்கள் சூறையாடினார்கள். கட்சியில் உறுப்பினர் அல்லாத ஒரு பன்னீர்செல்வதை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அனுமதிக்கக் கூடாது எனவும், அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளோம். IPC 145 படி வழக்கு பதிவு செய்யப்பட்ட ஒருவரை தலைமைக் கழகத்திற்குள் அனுமதிக்க கூடாது.” என்றார்.

வைத்திலிங்கம் சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், என்னுடைய நண்பர் வைத்திலிங்கத்திற்கு அதிமுகவில் எந்த வேலையும் இல்லை. எனவே அமமுகவில் சாக்லேட் கொடுத்து கூப்பிடுகிறார்கள் என்றார்.

கட்சியில் அடிப்படை பதவியில் கூட இல்லாதவர் எப்படி அதிமுக அலுவலகத்திற்கு செல்ல முடியும் என கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அதிமுக தலைமைக் கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இல்லாத ஓபிஎஸ் எப்படி கட்சியின் லெட்டர் பேட், அதிமுக கொடி ஆகியவற்றை பயன்படுத்த எப்படி முடியும் என கேள்வி எழுப்பினார்.

யார் உண்மையான தொண்டனாக இருந்தாலும் அதிமுக கட்சியை தாண்டி எந்த ஒரு கட்சிக்கும் போக மாட்டான் என தெரிவித்த ஜெயக்குமார், திமுகவும் ஓபிஎஸ்ஸும் கைகோர்த்து விட்டார்கள் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.