ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை செய்யும் தமிழக அரசின் தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று உட்சநீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இந்த விளையாட்டை ஊக்குவித்து வந்த ஜங்லி கேம்ஸ், பிளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் போன்ற நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் அகில இந்திய ஃபெடரேஷன் ஆப் கேமிங் என்ற அமைப்பிற்கும் உச்சநீதிமன்றம் நோட்டிஸ் பிறப்பித்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலமாக ஏராளமானோர் தங்களது பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டார்.  இதன் காரணமாக மக்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு 2020-ம் ஆண்டு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் விதமாக சட்டம் கொண்டுவந்தது. அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜங்லி கேம்ஸ், பிளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு கொண்டுவந்த தடை சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அனிருத் போஸ் , மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர், இந்த விளையாட்டு மிகவும் மோசமானதாக உள்ளது. இந்த விளையாட்டில் ஏராளமானோர் தங்கள் பணத்தை இழந்த தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் பலர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதன் காரணமாகவே தமிழக அரசு இந்த விளையாட்டுகளை தடை செய்து சட்டத்திருத்தம் கொண்டுவந்தது. அதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் அந்த தடை சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த சட்டமானது முழுக்க முழுக்க மக்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்டது. எனவே ரம்மி விளையாடிற்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டுவந்த சட்ட திருத்தத்திற்கு ஐகோர்ட் வித்த தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனங்களுக்கு நோட்டிஸ் அனுப்பி உத்தரவிட்டது. மேலும் 10 வாரங்களுக்கு பிறகு இந்த வழக்கு விசாரணை மீண்டும் தொடரும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.