பத்திரிகையாளர் சித்திக் கப்பானுக்கு ஜாமின்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராசில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஆதிக்க சாதியினரால் 2020ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை காப்பாற்ற பெண்ணின் உடலை யாருக்கும் தெரியாமல் அம்மாநில போலீசார் அவசர அவசரமாக எரித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பானை, உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் அம்மாநில போலீசார் கைது செய்தனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் அவருக்கு தொடர்பு உள்ளதாகவும், ஹத்ராஸ் விவகாரத்தை அவர் பிரச்சினைக்குரிய வகையில் கையாள முயற்சித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சித்திக் கப்பன் மீது சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் (யுஏபிஏ) போடப்பட்டு, மதுரா சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சித்திக் கப்பன் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜாமீன் வழங்கப்படாமல் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், தனக்கு ஜாமீன் கோரி பத்திரிகையாளர் சித்திக் கப்பான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு விசாரித்தது. சித்திக் கப்பான் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதங்களை முன் வைத்தார்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பானுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஆறு வாரங்களுக்கு டெல்லியில் தங்கி இருக்கவும், அதன் பிறகு கேரளாவிற்கு சென்று உள்ளூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் நிபந்தனை விதித்து அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

முன்னதாக, ‘அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட ஒரு பத்திரிகையாளரின் மகள் நான்’ என கேரள மாநில பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் அரசியல், மதம் சார்ந்து நடக்கும் வன்முறைகள் குறித்து சித்திக் கப்பானின் மகள் ஹெஹ்னஸ் கப்பான் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.