பிள்ளையார் கோவிலுக்கு எதிர்ப்பு; பெங்களூருவில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் -பாஜக அரசின் முடிவு என்ன?

பெங்களூரு (கர்நாடகா): பல்கலைக்கழக வளாகத்தில் பிள்ளையார் கோவில் கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, பெருநகர பெங்களூரு மாநகராட்சி சட்டவிரோதமாக இந்த பிள்ளையார் கோவிலை கட்டி வருவதாகவும், இதனால் தங்களின் படிப்புச்சூழலில் பாதிப்பு ஏற்படும் எனவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதிகாரிகள் சட்ட விரோதமாக இந்த கோவிலை கட்டி வருவதாகவும், பல்கலை., வளாகத்தில் இந்த கோவில் தேவையற்றது என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் செய்தியாளிடம் தெரிவித்தார். மாணவர்களின் எதிர்ப்பை தொடர்ந்து கோவிலின் கட்டுமானத்தை நிறுத்திய பல்கலை., நிர்வாகம், இதுபோன்ற விவகாரங்களில் மாணவர்களிடம் கலந்தோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் என போராட்டக்காரர்களிடம் உறுதியளித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து கல்புர்கி எம்எல்ஏ பிரியங்க் கார்கே கூறுகையில்,”தங்களுக்கு வசதியான உள்கட்டமைப்பும், தரமான நூலகமும் வேண்டும் என பெங்களூரு பல்கலை., மாணவர்கள் ஒன்றிணைந்து கூறுகின்றனர். மேலும், மதம் சார்ந்த நிகழ்வுகள் தங்களின் பல்கலைக்கழக்கத்தில் தேவையில்லை என்றும் கூறுகின்றனர். ஆனால், யாரிடமும் ஆலோசிக்காமலும், வழிமுறைகளை முறையாக பின்பற்றாமலும் அரசு தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளது” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர்,”கடந்த 3 ஆண்டுகளில் பாஜக அரசு எதையும் செய்யவில்லை. பெங்களூருவில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதில் முழுவதுமாக தான் தோல்வியடைந்துவிட்டதாக முதல்வர் பசவராஜ் பொம்மை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனாலும், பெங்களூரு நடப்பவை அத்தனைக்கும் காங்கிரஸ் மீதே அவர் பழி சுமத்தி வருகிறார்.

நாங்கள் பிரதமர் மோடியை கேம் சேஞ்சர் என்று நினைத்தோம். ஆனால், அவரோ நேம் சேஞ்சர் ஆக மாறியுள்ளார். கர்தவ்யா பாத்-இல் என்ன மாறியுள்ளது?. பராமரிப்பு பணியை மேற்கொண்டு அதை அழகுப்படுத்தியுள்ளது அவ்வளவுதான்” என்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்க் கார்க், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுனா கார்கேவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், பல்கலைக்கழகத்தில் பிள்ளையார் கோவில் கட்டும் பணிகள் போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், அதிகாரிகளுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்த மாணவர்கள் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.