மாத்திரை சாப்பிட்ட சில மணி நேரத்தில் மயக்கம் அடைந்த மாணவிகள்! அரசுப் பள்ளியில் பரபரப்பு

ஆத்தூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்பட்ட மாத்திரை உட்கொண்ட பின்னர் மாணவிகள் மயக்கம்போட்டு விழுந்தனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாத்திரை காலாவதி ஆகவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி காந்திநகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. பள்ளியில் சுமார் 2500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று உலக குடல் புழுக்கள் ஒழிப்பு தினம் என்பதால் மாணவிகளுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.
image
இந்நிலையில், மாத்திரை சாப்பிட்ட சில மணி நேரத்தில் மாணவிகள் சிலர் மயக்கம் ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாணவிகளை அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து அடுத்தடுத்த மாணவிகள் மயக்கம் அடைந்ததால் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் தகவலறிந்து வந்த மாணவிகளின் பெற்றோர்களும் மருத்துவமனை வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.
image
அதன்பின்னர் சேலம் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் நெடுமாறன், நேரடியாக மருத்துவமனைக்கு வந்து மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசுகையில், குடல் புழுக்கள் ஒழிப்பு தினத்தையோட்டி ஆண்டுக்கு இருமுறை பூச்சி மாத்திரைகள் வழங்கப்படும். அதன்பேரில் சேலம் மாவட்டத்தில் தற்போது மூன்று லட்சத்து 24 ஆயிரம் மாத்திரைகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.
பெண்கள் மேல்நிலைப் பள்ளி மட்டுமல்லாது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தொடக்க பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மட்டும் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகவும், மாணவிகள் தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
image
மேலும் குடலில் புழுக்கள் இருந்தால் இந்த மாத்திரை சாப்பிட்டவுடன் லேசான வயிற்று வலி ஏற்படும். அதுவும் நூற்றில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும். இந்நிலையில் மாணவி ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் ஆசிரியர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததை அடுத்து மற்ற மாணவிகள் தங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தான் இந்நிகழ்வு நடந்து இருப்பதாக தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.