மும்பையில் 2 நாளாக தங்கியிருந்த போது அமித் ஷாவை சுற்றி சுற்றி வந்த ‘டுபாக்கூர்’ உள்துறை அதிகாரி : ஆந்திர எம்பியின் உதவியாளர் கைது

மும்பை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாதுகாவலரை போன்று, மும்பையில் அவருடன் இருந்த ஆந்திராவை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த ஜூலை 30ம் தேதி மகாராஷ்டிர  முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்ற பிறகு, முதன் முறையாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை வந்தார். அவர் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரை சந்தித்து பேசினார்.

அமித் ஷாவின் பாதுகாப்பு குழுவில் இடம்பெற்றிருந்த பாதுகாவலர்களுள் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் சுற்றித் திரிந்தார். அவர், பாதுகாப்பு குழுவினர் அணியும் ஆடைகளை அணிந்திருந்தார். இதை கவனித்த உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் மும்பை  போலீசாருக்கு தகவல் அளித்தார். அதையடுத்து அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘உள்துறை அமைச்சரின் பாதுகாப்புக் குழுவின் பட்டியலில் இல்லாத ஒருவர், குறிப்பிட்ட இடங்களில் அவருடன் சுற்றித் திரிந்தார்.

ஒன்றிய உள்துறை அமைச்சக அடையாள அட்டையை அணிந்து கொண்டு, அமித் ஷாவின்  பாதுகாப்புக் குழுவுடன் இணைந்து சுற்றிவந்தார். அமித் ஷா கலந்து கொண்ட  இரண்டு நிகழ்ச்சிகளில் ஹேமந்த் பவார் கலந்து கொண்டார். அவரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளோம். ஐந்து  நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் ஆந்திராவை சேர்ந்த ஹேமந்த் பவார் என்பது தெரியவந்தது. ஆந்திராவை சேர்ந்த எம்பியின் தனிப்பட்wட செயலாளர் என்பது விசாரணையில் தெரியவந்தது. எதற்காக உள்துறை அமைச்சரின் பாதுகாப்பு குழுவுடன் சேர்ந்து சுற்றித் திரிந்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.