15 கி.மீ சாலையை கடக்க 1 மணி நேரம் – போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் OMR வாசிகள்!

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் (பழைய மாமல்லபுரம் சாலை) உச்ச நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திப்பதாக கூறுகிறார்கள். மெட்ரோ பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளால் தினம் தினம் சிரமத்தை சந்திக்கும் மக்களின் நிலை குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
The curious case of OMR - The Hindu
ஐடி நிறுவனங்களால் ஆளப்படும் ஓ.எம்.ஆர். சாலை:
ஓ.எம்.ஆர். ( Old Mahabalipuram Road – பழைய மாமல்லபுரம் சாலை) என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி தொழில்நுட்ப விரைவுச் சாலை மத்திய கைலாசில் ஆரம்பித்து மாமல்லபுரம் வரை நீண்டு செல்கிறது. சென்னை நகரின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகள் இந்த சாலையில் தான் அமைந்துள்ளது. இரு பக்கங்களிலும் தலா மூன்று வாகனங்கள் செல்லும் அளவு விசாலமான விரைவுச் சாலை, இரு சர்வீஸ் சாலைகளிலும் தலா இரு வாகனங்கள் செல்லுமளவு வசதி என மொத்தம் 10 வாகனங்கள் விறுவிறுவென பறக்க ஏதுவாக இருந்த அந்த ஓ.எம்.ஆர் சாலையின் நிலை இன்று பரிதாபகரமாக மாறியுள்ளது.
53 Omr Stock Video Footage - 4K and HD Video Clips | Shutterstock
போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் ஓ.எம்.ஆர்:
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு அதிகரித்துள்ள வாகனங்களின் பயன்பாடு மற்றும் கட்டுமான பணிகளால் ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. இதனால் சோழிங்கநல்லூரில் இருந்து மத்திய கைலாஷ் வரை உள்ள 15 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை இந்த சாலையை கடப்பதற்கு ஒரு மணி நேரம் ஆவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
image
எல்லாப் பணிகளும் ஒரே நேரத்தில் – ஒரே சாலையில் – சிரமத்தில் மக்கள்:
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், நடை மேம்பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் என அனைத்துப் பணிகளும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் ஓஎம்ஆர் சாலையில் பல இடங்களில் சர்வீஸ் சாலைகள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இதனால் சோழிங்கநல்லூர் சந்திப்பு, துரைப்பாக்கம் சந்திப்பு, பெருங்குடி சந்திப்பு, திருவான்மியூர் டைட்டில் பார்க் சந்திப்பு, மத்திய கைலாஷ் சந்திப்பு ஆகிய ஐந்து பகுதிகளில் வாகன தேக்கம் ஏற்படுகிறது.
image
இந்நிலையில், பெருங்குடி பகுதியில் வாகன நெரிசல் காரணமாக காற்று மாசுபாடும் ஏற்படுகிறது. இதனால் திருவான்மியூர் வரை மின்சார ரயில் மூலம் ஓஎம்ஆர் சாலைக்கு வருவதாகவும் ஆனால் திருவான்மியூரில் இருந்து சோழிங்கநல்லூர் செல்வதற்கு ஒரு மணி நேரம் ஆவதாக ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
image
வாகன பெருக்கமும் ஒரு காரணமா?
2019 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஓஎம்ஆர் சாலையில் 64 சதவீதம் இருசக்கர வாகனமும் 29 சதவீதம் கார்களும் 7 சதவீதம் மாநகரப் பேருந்து மற்றும் லாரிகள் செல்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஓஎம்ஆர் சாலையில் கார்களின் பயன்பாடு 10% அதிகரித்துள்ளதும், 15 கிலோமீட்டர் தூரத்திற்கு தொடர்ச்சியாக மேம்பாட்டு பணிகள் சாலையில் நடைபெற்று வருவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே பிரச்சனைக்கான தீர்வை போக்குவரத்து காவல்துறை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
image
நகர் முழுவதும் நெரிசல் – பரிதவிக்கும் மக்கள்:
மெட்ரோ மற்றும் மழைநீர் வடிகால் பணிகளால் ஓஎம்ஆர் சாலை மட்டுமின்றி ஆற்காடு சாலை, பூந்தமல்லி சாலை, போரூர் சாலை, ஹபிபுல்லா சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே நகர் முழுவதும் உச்ச நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பரிதவிக்கும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
– ந.பால வெற்றிவேல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.