இனி தெரு நாய் கடித்தால் ..! – உச்சநீதிமன்ற தீர்ப்பால் மக்கள் அதிர்ச்சி..!

இனி தெரு நாய் கடித்தால் அதற்கு உணவு அளித்தவர்களே பொறுப்பாவார்கள் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.கேரள மாநிலம் அரைகிணறு பகுதியில் 12 வயது சிறுவன் நூராஸ், வீட்டிற்கு வெளியே சாலையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். அப்போது திடீரென வேகமாக ஓடி வந்த தெரு நாய் ஒன்று சிறுவனை கடித்து குதறியது.

இதனால் சிறுவன் தப்பித்து செல்ல முயன்றும் விடாமல் தெருநாய் தொடர்ந்து கடித்த நிலையில், இச்சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் சிறுவனை கடித்த நாய் அதேநாளில் அப்பகுதியை சேர்ந்த மேலும் 3 பேரை கடித்ததாக கூறப்படுகிறது.
இதில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மாநில அரசின் தகவல்படி 2022-ல் இதுவரையிலும் கேரளாவில் 21 பேர் வெறிநாய்க் கடியால் இறந்துள்ளனர். அவர்களில் பாதிக்கப்பட்ட 5 பேர் அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் படி ரேபிஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்டனர்.
கேரளாவில் வெறிநாய்க் கடிக்கு எதிரான தடுப்பூசிகள் பயனற்றதாக மாறிவருகிறது. இது தொடர்பாக அண்மை காலமாக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதன்பின் மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், மாநிலத்தில் கிடைக்கும் ரேபிஸ் தடுப்பூசியின் தரத்தை பரிசோதிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் கேட்டுக்கொண்டார்.
கேரளா முழுதும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக உடனடி செயல் திட்டத்தை உருவாக்க மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது. இதுபற்றி முதல்வர் பினராயி விஜயனை சந்தித்துப் பேச இருப்பதாக உள்ளாட்சித்துறை மந்திரி எம்.பி.ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாநிலத்தில் 152 தொகுதிகளில் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையங்கள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக எம்.பி.ராஜேஷ் தெரிவித்தார். அத்துடன் பொது மக்களின் ஒத்துழைப்புடன் விரைவில் தீர்வுகாணப்படும் எனவும் அவர் கூறினார்.
இந்நிலையில் தெரு நாய்களுக்குத் தொடர்ந்து உணவளிக்கும் நபர்களே தடுப்பூசி செலுத்துவதற்குப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அந்த விலங்குகள் மக்களைத் தாக்கினால் அதற்கான செலவையும் ஏற்கவேண்டும் எனவும் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் ஜே.கே.மகேஸ்வரி போன்றோர் அடங்கிய சுப்ரீம்கோர்ட் அமர்வு பரிந்துரைத்துள்ளது. மக்களின் பாதுகாப்புக்கும் விலங்குகளின் உரிமைகளுக்கும் இடையில் சமநிலை பேணப்பட வேண்டும் என உச்சநீதி மன்றம் தெரிவித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.