'உயிரோடுதான் இருக்கேன்'… பென்சன் தொகை நின்றுபோனதால் பாடையில் வந்த முதியவர்

ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கை சேர்ந்தவர் 102 வயதான துலி சந்த். இவருக்கு மாதா மாதம் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தோடு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுவிட்டது. துலி சந்த் இறந்துவிட்டார் என தெரிய வந்ததன் அடிப்படையில் அவரது பென்சன்தொகையை நிறுத்திவிடதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த துலி சந்த் சரியான ஆவணங்களை எடுத்துக்கொண்டு அதிகாரிகளிடம் முறையிட்டு வந்துள்ளார். ஆனாலும், ஏப்ரல் மாதம் அவருக்கு கிடைக்கவேண்டிய பென்சன் தொகை வரவில்லை. இதுகுறித்து, துலி சந்த் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் மாநில தலைவர் நவீன் ஜெய்ஹிந்தின் உதவியுடன் நிர்வாக அதிகாரிகளிடமும், முன்னாள் அமைச்சர் மணீஷ் குரோவரிடமும் ஊர்வலமாக சென்று மனு அளித்தார். அப்போது முதியவர் துலி சந்த், தான் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் என்ற பதாகையுடன் சவ அலங்காரம் செய்து அதன் மீது அமர்ந்தபடி சென்றுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், துலி சந்த் இறந்துவிட்டதாக அவரது குடும்ப அடையாள அட்டையில் காட்டப்பட்டதால் அவரது ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது என்றும் துலி சந்த் மட்டுமல்ல, 170 மூத்த குடிமக்களிடமிருந்தும் இதேபோன்ற கோரிக்கைகளை நாங்கள் பெற்றுள்ளோம். குடும்ப அடையாள அட்டைகளை சரி பார்க்கும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. ஓய்வூதியம் பெறுபவர்களின் பெயர்கள் அவர்களது குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும். அப்போது அவர்களது பெயர்கள் ஆவணங்களில் இல்லையென்றால் ஓய்வூதியம் நிறுத்தப்படுவது வழக்கம் என கூறினர்.

இந்நிலையில், முதியவர் துலி சந்த்தின் ஓய்வூதியத்தை மீட்க 24 மணி நேரம் கெடு விதித்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் மாநில தலைவர் நவீன் ஜெய்ஹிந்த், அவரது ஓய்வூதியத்தை மீட்டெடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.