கார் விபத்துகளில் நிகழும் மரணங்கள் உயிரைக் கட்டிக்காக்க உதவுமா சீட்பெல்ட்?: மிஸ்திரி மரணத்தில் தெரியவரும் உண்மைகள்

டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் மரணம், சாலை விபத்து குறித்த பல்வேறு கேள்விகளையும் காரணங்களையும் முன்வைத்திருக்கிறது. தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரத்தின்படி, கடந்த ஆண்டில் மட்டும் 1.55 லட்சம் பேர் சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளனர்.அதாவது, சராசரியாக தினமும் 426 பேர் அல்லது ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 18 பேர் மரணம் அடைகின்றனர். இதுபோல், கடந்த ஆண்டு நடந்த 4.03 லட்சம் விபத்துகளில் 3.71 லட்சம் பேர் காயம் அடைந்துள்ளனர்.  இது, எளிதில் கடந்து போய்விடக்கூடிய தகவல் அல்ல.

மிகவும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த உயர்தர சொகுசுகாரில் பயணம் செய்த மிஸ்திரியும், அருகில் அமர்ந்திருந்த நண்பரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஆனால், முன்சீட்டில் அமர்ந்திருந்த, காரை ஓட்டிய மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையின் பிரபல மகப்பேறு மருத்துவர் அனாகிதா பண்டோலே, அவரது கணவர் டாரியஸ் இருவரும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பி விட்டனர். அவர்களுக்கு தீவிர மருத்துவ கண்காணிப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கி விட்டது. ஆனாலும், முன்சீட்டில் அமர்ந்திருந்த இருவரும் தப்பியதற்கு சீட் பெல்ட் அணிந்திருந்ததுதான் முக்கிய காரணம் என்றும், பின் சீட்டில் இருந்த சைரஸ் மிஸ்திரியும் அவரது நண்பரும் சீட்பெல்ட் அணியவில்லை எனவும் முதல் கட்டண விசாரணையிலேயே தகவல் வெளியானது. இதன்பிறகுதான், பின் சீட்டில் இருப்பவர்கள் கட்டாயம் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்பதோடு, அவர்கள் சீட்பெல்ட் அணியாவிட்டால் எச்சரிக்கை செய்யும் அலாரம் பொருத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி.மோட்டார் வாகன சட்டப்பிரிவு 138 (3)ன்படி, காரின் முன்சீட்டிலும், பின் சீட்டிலும் அமர்ந்திருப்பவர்கள் சீட்பெல்ட் அணிவது கட்டாயம். இல்லாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

ஆனால், சட்டத்தில் இடமிருந்தும், பின்சீட்டில் அமர்ந்திருப்பவர்கள் சீ்ட் பெல்ட் அணியாவிட்டால், இந்த சட்ட விதியை போலீசார் பெரும்பாலும் அமல்படுத்துவதில்லை. டூவீலரில் செல்பவர்கள் போலீசை பார்த்ததும் ஹெல்மெட் அணிந்து கொள்வது போல், காரை ஓட்டுபவர்கள் சீட்பெல்ட் அணிந்து கொள்கின்றனர். அந்த அளவுக்குதான் இந்த சட்டம் குறித்த விழிப்புணர்வும் நடைமுறையும் இருக்கிறது. இந்த சட்ட நடைமுறையை கடுமையாக செயல்படுத்துவதற்கான அவசியத்தை சைரஸ் மிஸ்திரியின் மரணம் உணர்த்தியிருக்கிறது. விபத்து நேரும்போது சீட்பெல்ட் அணிந்திருந்தால் ஏற்படும் பாதிப்புக்கும், சீட்பெல்ட் அணியாவிட்டால் ஏற்படும் பாதிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. சைரஸ் மிஸ்திரியின் கார் விபத்து நடக்கும்போது 140 கி.மீ வேகத்தில் சென்றதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.

அதன்படி, அதில் பயணம் செய்த நபர் 80 கிலோ எடை உள்ளவராக இருந்தால், விபத்தின்போது அவர் மீதான தாக்குதல் சுமார் 30,833 கிலோ, அதாவது சுமார் 3 டன்  அளவுக்கு இருக்கும். ஏறக்குறைய அந்த நபரின் மீது அவரது  உடல் எடையை விட சுமார் 385 மடங்கு எடை தாக்குவதற்கு சமம். ஆனால், விபத்து நடப்பதற்கு 5 விநாடிகள் முன்பு அந்த கார் 100 கி.மீ வேகத்தில் சென்றதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,  காரின் வேகம் மணிக்கு 100 கி.மீ ஆக இருந்திருந்தால், அதே நபரின் மீதான தாக்குதல் 15,731 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.  அந்த நபர் சீட் பெல்ட் அணியாவிட்டால் 140 கி.மீ. வேகத்தில் கார் சென்று விபத்து ஏற்படும்போது தாக்குதல் 1,54,164 கிலோ (சுமார் 154 டன்கள்) எனவும், 100 கி.மீ வேகத்தில் சென்றிருந்தால் தாக்குதல் 78,655 கிலோ, அதாவது சுமார் 78 டன்கள் கொண்டதாக இருந்திருக்கும் என இதற்கான கணக்கீட்டின் மூலம் அறிய முடிகிறது.

சைரஸ் மிஸ்திரிக்கு ஏற்பட்ட பாதிப்பும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. மிஸ்திரியின் உடலை கூராய்வு செய்த மருத்துவர்கள், அவரது நெஞ்சுப்பகுதி எலும்பு மோசமாக நொறுங்கியிருந்ததாக கூறியுள்ளனர். மேலும், அவரது தலை, கால், தொடை பகுதிகளிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டு, ரத்தம் வெளியேறி உடனடி மரணம் நிகழ்ந்துள்ளது. ஒரு கார் 100 கி.மீ. வேகத்தில் இருந்து திடீரென பூஜ்யம் வேகத்தை எட்டும்போது ஏற்படும் அதிர்வுதான் இத்தகைய மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

விபத்து நடந்தால் உயிரிழப்பு ஏற்படவும், தடுக்கவும் எத்தனையோ காரணிகள் இருந்தாலும், பலராலும் அலட்சியப்படுத்தப்படும் சீட்பெல்ட் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை சைரஸ் மிஸ்திரியின் மரணம் உணர்த்தியிருக்கிறது. மேலும், மிஸ்திரியின் மரணத்தின் மர்மம், சாலை தன்மை, சாலை விதிகளை கடைப்பிடிக்காதது போன்ற விபத்துக்கான வேறு காரணங்களையும் தொடர் ஆய்வுகளின் மூலம் வெளிப்படுத்தி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.