5 போலீஸாரை லாக்-அப்பில் அடைத்த எஸ்.பி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

பாட்னா: பிஹாரில் 5 போலீஸாரை எஸ்.பி. ஒருவர் லாக்-அப்பில் அடைத்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பிஹார் மாநிலத்தின் நவாடா நகர காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்ருகன் பாஸ்வான், ராம்ரேகா சிங், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ் பவன், சஞ்சய் சிங், ராமேஷ்வர் உரான் ஆகிய 5 பேரும் காவல் நிலைய லாக்-அப்பில் அடைக்கப்பட்டிருப்பது போன்ற கண்காணிப்பு கேமரா பதிவு வாட்ஸ் அப்பில் வெளியானது.

அவர்களின் பணி திருப்திகரமாக இல்லாததால் ஏரியா எஸ்.பி. கவுரவ் மங்களா அவர்களை லாக்-அப்பில் அடைத்ததாகவும் 2 மணி நேரத்துக்குப் பிறகு நள்ளிரவில் 5 போலீஸாரும் விடுவிக்கப்பட்டதாகவும் வாட்ஸ்-அப் தகவல் தெரிவித்தது. இது பிற சமூக வலைதளங்களிலும் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அப்படி எவுதும் நடக்கவில்லை என எஸ்.பி. கவுரவ் மங்களா மறுத்துள்ளார். காவல் நிலைய அதிகாரி இன்ஸ்பெக்டர் விஜய் குமார் சிங்கும் இதே கருத்தை கூறியுள்ளார்.

ஆனால் இதுதொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, “கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு வழக்குகளை மறுஆய்வு செய்ய காவல் நிலையத்துக்கு எஸ்.பி. வந்துள்ளார். அப்போது சில போலீஸார் பணியில் அலட்சியமாக இருந்ததால் ஆத்திரமடைந்து அவர்களை லாக்-அப்பில் அடைக்க உத்தரவிட்டார்” என்று தெரிவித்தன.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எஸ்.பி. கவுரவ் மங்களாவுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என பிஹார் போலீஸ் காவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிஹார் போலீஸ் காவலர் சங்கத் தலைவர் மிருத்யுஞ்சய் குமார் சிங் கூறும்போது, “நான்எஸ்.பி.யிடம் பேச முயன்றேன். ஆனால் அவர் என்னுடன் பேசவிரும்பவில்லை. கண்காணிப்பு கேமரா பதிவுகள் அவரால் அழிக்கப்படலாம் என அஞ்சுகிறோம். அவரது நடவடிக்கை ஜூனியர்அதிகாரிகளை மனு உளைச்சலுக்கு உள்ளாக்கியது. அவருக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும்” என்றார்.

பிஹார் தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவில், போலீஸ் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணியாற்றுவோரை கையாளுவதில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.