ஆரணி அடுத்த விளைசித்தேரி, துந்தரீகம்பட்டில் கி.பி.8 மற்றும் 10ம் நூற்றாண்டு கொற்றவை சிலைகள் கண்டெடுப்பு

ஆரணி :  ஆரணி அடுத்த விளைசித்தேரி, துந்தரீகம்பட்டு கிராமங்களில் கி.பி.8 மற்றும் 10ம் நூற்றாண்டு கொற்றவை, பல்லவர் கால சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரணி – சேத்துப்பட்டு செல்லும் சாலையில்  விளைசித்தேரி, துந்தரீகம்பட்டு ஆகிய கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் மிக பழமையான  காளியம்மன் கோயில்  உள்ளது. இக்கோயிலில் பல்லவர் கால சிலைகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சம்புவராயர் ஆய்வு மைய பேராசிரியர் அ.அமுல்ராஜ், வரலாற்று ஆய்வாளர் ஆரணி ஆர்.விஜயன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அங்குள்ள சிற்பம் கி.பி.8ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம் என்பது ஆய்வில் உறுதியானது. மேலும், இக்கோயிலுக்கு  அருகிலேயே (மேற்கில்) விஷ்ணு அல்லது சிவன் என கருதக்கூடிய சிலையொன்று இருப்பதையும் கண்டெடுத்தனர்.இதேபோல், இந்த கிராமத்தின்  அருகில் உள்ள துந்தரீகம்பட்டு கிராமத்தில் சுமார் 100 அடி தொலைவில் விளைநிலத்தில் கி.பி.10ம் நூற்றாண்டை சேர்ந்த  பிற்கால சோழர்கள் கலை பாணியிலான கொற்றவை சிற்பம் ஒன்று இருப்பதையும் கண்டெடுத்தனர்.
இதுகுறித்து பேராசிரியர் அ.அமுல்ராஜ் கூறியதாவது:

விளைசித்தேரி கிராமத்தில்  உள்ள காளியம்மன் சிற்பம் பல்லவர் காலத்தில் மக்கள் வழிபட்ட கொற்றவை சிலையாகும். தலையில் கிரீடம், வலது மேல் கரத்தில் பிரயோக சக்கரம், இடது மேல் கரத்தில் சங்கு ஆகியன காணப்படுகின்றன. காதுகளில் மகர குண்டலங்கள், மார்பு கச்சை, முப்பிரிகளாலான தோள் வளை, கை வளை ஆகியவையும் காட்டப்பட்டுள்ளன. வலது கீழ் கை அபய முத்திரையாக உள்ளது.  இடது கீழ் கை, இடது தொடை மீது  தட்டிய வலம்பாதம் நிலையில்  உள்ளது. உடலில் முட்டிவரை நீண்ட ஆடையுடன் எருமை தலை மீது பாதங்களை வைத்தபடி இச்சிற்பம் காணப்படுகிறது.

இந்த சிற்பத்திற்கு அருகில் மேற்கு புறமாக, பிற்கால பல்லவர் கலை பாணியிலான சிலையொன்று காணப்படுகிறது. தலையில் கிரீட மகுடம், காதுகளில் மகர குண்டலங்கள் உள்ளன. வலது கீழ் கை அபயமுத்திரை தாங்கியுள்ளது. இடது கீழ் கை தட்டிய வலம்பாதமாக உள்ளது. கைகளில் தோள் வளை, மார்பில் 2 ஆரங்கள்,  வயிற்றில் உதரபந்தம், பூணூல் ஆகியவை காணப்படுகிறது. இச்சிற்பம் விஷ்ணு அல்லது சிவனாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர். இது மேலும் ஆய்வுக்குரியது.

இதேபோல், துந்தரீகம்பட்டு கிராமத்திற்கு கிழக்கில் தெற்கு திசையில் சுமார் 100 அடி தொலைவில் விளைநிலத்தில் கொற்றவை எனும் காளியம்மமன் சிலையை மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்த சிலை குறித்து ஆய்வு செய்தபோது, இது கி.பி.10ம் நூற்றாண்டு பிற்கால சோழர் காலத்தை சேர்ந்த  கொற்றவை சிற்பம் என கண்டறியப்பட்டது.

எட்டு கைகளுடன் காட்சி தரும் சிற்பத்தின்  தலையில் கரண்ட மகுடம், பின்புறம் பிரபை ஆகியவை உள்ளன. மேல் வலது கையில் சூலத்தை தாங்கி மகிஷாசூரனை குத்துகின்ற காட்சி காட்டப்பட்டுள்ளது. மற்ற கரங்களில் சக்கரம், கத்தி, சங்கு, கேடயம் ஆகியவை காட்டப்பட்டுள்ளது. காதுகளில் நீண்ட வட்ட வடிவிலான பத்ர குண்டலங்கள் உள்ளன.

எருமை தலை மீது நின்ற கோலத்தில் சிலைகள் காணப்படுகிறது.அதேபோல், ஆரணி சுற்றுவட்டார பகுதிகள், படவேடு பகுதியில் இதுபோன்ற சம்புவராய மன்னர்களின் வரலாற்று தடயங்கள் பெருமளவில் கண்டறியப்பட்டுள்ளன. பல்லவர் காலத்தை சேர்ந்த சிற்பங்கள், கல்வெட்டுகள் போன்றவை இதுவரை குறைவாகவே கண்டறியப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.