ரசிகர்கள் வாழ்த்தினால் நடிகர்களின் சம்பளம் இரண்டு மடங்காகும்: விக்ரம் வெற்றி விழாவில் கமல்

கோவை: கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம், திரையரங்குகளில் 100 நாட்களை கடந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் பாக்ஸ் ஆபிஸிலும் 400 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

விக்ரம் படம் திரையரங்குகளில் 100 நாட்களை கடந்ததை முன்னிட்டு கோவையில் வெற்றி விழா நடைபெற்றது.

மெகா சாதனைப் படைத்துள்ள விக்ரம்

அரசியலில் பிஸியாக இருந்த நடிகர் கமல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ திரைப்படத்தில் இணைந்தார். மாநாகரம், கைதி, மாஸ்டர் என ஏற்கனவே தனது திறமையை நிரூபித்துவிட்ட லோகேஷ், விக்ரம் படத்தின் திரைக்கதையை செம்மையாக பட்டைதீட்டிவிட்டு படமாக்கினார். அதற்கான ரிசல்ட்டை விக்ரம் திரைப்படம் இப்போது பெற்றுள்ளது. கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா, நரேன், காளிதாஸ் ஜெயராம் என மல்டி ஸ்டார் படமாக வெளியான விக்ரம், 400 கோடி வசூலித்ததோடு, திரையரங்குகளிலும் நூறு நாட்கள் ஓடி சாதனைப் படைத்துள்ளது.

கோவையில் நூறாவது நாள் வெற்றிவிழா

கோவையில் நூறாவது நாள் வெற்றிவிழா

விக்ரமை தொடர்ந்து கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் வேகமெடுத்துள்ள நிலையில், விக்ரம் வெற்றி விழா கோவையில் கொண்டாடப்பட்டது. இதில், உலக நாயகன் கமல்ஹாசன், திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய கமல், “சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் 4 படங்கள் நடித்தும் என்னை யாரும் கண்டுக்கவில்லை. அதை மாற்ற வேண்டும் என உழைத்தேன். சினிமாவில் சாதித்தது எனக்காக மட்டும் என பெருமை பீத்திக்கொள்ள முடியாது” எனக் கூறினார்.

ஓடிடி பற்றி அப்பவே சொன்னேன்

ஓடிடி பற்றி அப்பவே சொன்னேன்

தொடர்ந்து பேசிய நடிகர் கமல், “ஒடிடி காலக்கட்டத்தில் பழைய திரையரங்குகள் எல்லாம் மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்களாக மாறி வருகின்றன. அதற்கு இளைஞர்கள் ஆதரவு கொடுக்க முன்வந்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒடிடி தளங்கள் குறித்து முன்கூட்டியே நான் சொல்லியிருந்தேன், அது இப்போது வந்துவிட்டது. திரையரங்குளில் உணவகங்கள் வரப்போகிறது, அமெரிக்காவில் ஏற்கனவே வந்துவிட்டது. உணவகமும் ஒரு நல்ல தொழில் தான். சினிமாவின் மவுஸ் இன்னும் குறையவில்லை. வாந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு போன்று தான் சினிமாவும்” எனத் தெரிவித்தார்.

நடிகர்களை மனதார வாழ்த்துங்கள்

நடிகர்களை மனதார வாழ்த்துங்கள்

மேலும், “சினிமா தான் 63 ஆண்டு காலமாக என்னை வாழ வைத்துள்ளது. நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கைவிடக்கூடாது. ஒரு வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது சிறந்த திரைப்படங்கள் எடுக்க உத்வேகமாக அமையும். நல்ல நடிகர்களை வாழ்த்துங்கள். நீங்கள் வாழ்த்தினால் அவர்களின் சம்பளம் இரண்டு மடங்காகும். என்னை மட்டுமல்ல. நன்றாக நடிக்கும் நடிகர்களை வாழ்த்துங்கள். எங்கள் சினிமா இன்னும் சிறப்பாக இருக்கும். பாலிவுட்டில் பயப்படுகிறார்கள், தென் சினிமா பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பிவிட்டது. என் குடும்பமும் சினிமாவில் தான் இருக்கிறது. புதிதாக வரக்கூடிய நடிகர்களை கவனித்து வருகிறேன். என்னிடம் இல்லாததை புதிய நடிகர்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறேன்” என பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.