‘போர் தொடுப்பதற்கான காலம் அல்ல இது’ – அதிபர் புதினிடம் கூறிய பிரதமர் மோடிக்கு அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டு

வாஷிங்டன்: ‘போர் தொடுப்பதற்கான காலம் அல்ல இது ’ என ரஷ்ய அதிபர் புதினிடம் நேரடியாக தனது கருத்தை நாசுக்காக தெரிவித்த பிரதமர் மோடியை அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டியுள்ளன.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகருக்கு சென்றிருந்தார். இதில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, கரோனா தொற்று காலத்துக்குப்பின், உலகம் பொருளாதார மீட்புக்கான சவாலை எதிர்கொண்டு வருகிறது என பேசினார். மாநாட்டுக்கு இடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு விஷயங்கள் குறித்து பேசினார்.

அப்போது அவர் உக்ரைன் போர் விவகாரம் பற்றியும் பேசினார். ‘‘இது போருக்கான காலம் அல்ல. இது குறித்து நான் உங்களிடம் ஏற்கெனவே போனிலும் பேசியுள்ளேன். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள்’’ என அதிபர் புதினிடம் பிரதமர் மோடி நாசுக்காக எடுத்துரைத்தார்.

உக்ரைன் மீது போர் தொடுக்க வேண்டாம் என ஐ.நா, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கூறிய போதெல்லாம் அதை கண்டு கொள்ளாமல் இருந்த ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடிக்கு நிதானமாக பதில் அளித்தார்.

‘‘உக்ரைனில் போரில் உங்கள் நிலையை அறிவேன். இதில் உங்கள் கவலையை நீங்கள் தொடர்ந்து தெரிவித்துள்ளீர்கள். கூடிய விரைவில் உக்ரைன் போரைநிறுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால் துரதிருஷ்டவசமாக, உக்ரைன் அதிபர் பேச்சுவார்த்தையை கைவிடுவதாக அறிவித்து ராணுவம் மூலம் தீர்வு காண விரும்புகிறார். நாங்கள் என்ன செய்ய முடியும். அங்கு என்ன நடக்கிறது என நாங்கள் எப்போதும் உங்களுக்கு தெரிவித்து வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.

ரஷ்ய அதிபருடனான நேரடி பேச்சுவார்த்தையில், அதிபர் மோடி கூறிய அறிவுரையை அமெரிக்க பத்திரிகைகள் வெகுவாக பாராட்டியுள்ளன.

‘‘புதினிடம் உக்ரைன் போரை கண்டித்தார் மோடி’’ என அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தலைப்பு செய்தியில் கூறியுள்ளது. ‘‘இந்த அரிய அணுகுமுறை, அனைத்து தரப்பிலும் இருந்து ரஷ்ய அதிபர் புதின் அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளதை காட்டியது’’ எனவும் வாஷிங்டன் போஸ்ட் அந்த செய்தியில் தெரிவித்துள்ளது.

மற்றொரு பிரபல நாளிதழ் ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள தலைப்பு செய்தியில், ‘இது போருக்கான காலம் அல்ல; புதினிடம் தெரிவித்தார் இந்தியத் தலைவர்’’ என்று குறிப்பிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.