துர்கா பூஜை கொண்டாட்டம்; வங்கதேசத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு| Dinamalar

கொமிலா: நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்தாண்டு நடந்த மத கலவரம் எதிரொலியாக, இந்தாண்டு துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வசிக்கின்றனர். கடந்தாண்டு கொமிலா என்ற இடத்தில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது இஸ்லாமியர்களின் புனித நுாலை சிலர் அவமதித்ததாக வதந்தி பரவியது. இதையடுத்து கலவரம் பரவியது. ஹிந்துக்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சிலர் கொல்லப்பட்டனர். ஹிந்துக்களின் வழிபாட்டு தலங்களும் சூறையாடப்பட்டன.

இந்நிலையில் கொமிலா நகரில் வசிக்கும் ஹிந்துக்கள் இந்தாண்டு துர்கா பூஜை பண்டிகையை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதையடுத்து நகர் முழுதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்தாண்டு துர்கா பூஜை கொண்டாட்டத்தை, கோவிலுக்கு வெளியில் நடத்தாமல், கோவிலுக்கு உள்ளே நடத்துவதற்கு போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இது குறித்து கொமிலா மாவட்ட கலெக்டர் முகமது கம்ருல் ஹசன் கூறியதாவது:இந்தாண்டு துர்கா பூஜை பண்டிகையை அமைதியாக கொண்டாடு வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.துர்கா பூஜை வழிபாட்டுக் குழுவினருடன் பேச்சு நடத்திஉள்ளோம். வழிபாடு மற்றும் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என, வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.