கிரிப்டோ கரன்சி விவகாரம் – நண்பனை கத்தி முனையில் கடத்திய நண்பர்கள் 3பேர் கைது

கிரிப்டோ கரன்சி விவகாரத்தில் நண்பனை கத்தி முனையில் கடத்திய நண்பர்களில் 3 பேர் கைதுசெய்யப்பட்டனர். 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
மதுரை கோரிப்பாளையம் தனியார் விடுதியில் கல்லூரி மாணவர் ஒருவரை மூன்று பேர் கத்தி முனையில் கடத்தி சென்றதாக மாநகர காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைப் பற்றி அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவம் நடைபெற்ற விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் உள்ள காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அதில் கல்லூரி மாணவர் ஒருவரை மர்ம நபர்கள் கத்திமுனையில் கடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அழகர் கோவில் மெயின் ரோட்டில் ஐந்து பேர் கும்பலை பிடித்துள்ளனர். இதில் சம்பவ இடத்தில் இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களிடமிருந்து அலங்காநல்லூர் மேட்டுப்பட்டியை சேர்ந்த அருணன் (வயது 23) என்ற கல்லூரி மாணவர் மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மேற்கண்ட 3 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
image
கடத்திச் சென்ற கல்லூரி மாணவர் அருணனிடம் விசாரணை நடத்தியபோது,
‘’கடந்தாண்டு கோவை கல்லூரியில் படித்த போது கிரிப்டோ கரன்சி வணிகம் பற்றி எனக்கு தெரியவந்தது. இதில் நாற்பதாயிரம் ரூபாய் முதலீடு செய்தால் வாரம் தோறும் 2000 வட்டி கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது இதனைப் பற்றி என் நண்பர்களிடம் தெரிவித்தேன். நண்பர்களோடு சேர்ந்து நானும் கிரிப்டோசர் கரன்சியில் முதலீடு செய்துள்ளேன்.
இந்நிலையில் முதலீடு செய்த கிரிப்டோ கரன்சி நிறுவனம் மூடப்பட்டுள்ளது என்று எனக்கு தகவல் கிடைத்தது. கோவையில் கல்லூரியில் என்னுடன் படித்த நண்பர்கள் ’உன்னை நம்பி தான் முதலீடு செய்தோம்; எனவே நாங்கள் முதலீடு செய்த 36 லட்சத்தை நீதான் கொடுக்க வேண்டும்’ என்று நெருக்கடி கொடுத்தனர். இதற்கு நான் உடன்படாததால் என்னை கடத்திச்சென்று செல்போனை பறித்து என்னை அடித்து துன்புறுத்தினர்’’ என்று கூறினார்.
மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில் அவர்கள் 16 லட்சம் ரூபாய்க் கேட்டு மிரட்டியது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக கல்லூரி மாணவரை கடத்திய அரவிந்த் குமார், சசிகுமார், கார்த்திகேயன் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். இதுதவிர தப்பியோடிய பிரசன்னா, ஆனந்த் ஆகியோரை தல்லாகுளம் போலீசார் தொலைபேசி எண்ணை வைத்து தேடி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.