“சுதந்திர ஜனநாயகமுள்ள இந்தியாவில் இறப்பதையே நான் விரும்புகிறேன்" – தலாய் லாமா

ஆன்மீக சிந்தனைகளாலும், அறிவார்ந்த அரசியல் பார்வைகளாலும் உலகம் முழுவதும் மதிப்புமிக்க மனிதராக அறியப்படுபவர் தலாய் லாமா. முக்கியமாக இவர், புத்தமதத்தைத் தழுவிய திபெத்திய ஆன்மீகத் தலைவராவார். இருப்பினும் சீன அதிகாரிகள் அவரை ஒரு சர்ச்சைக்குரிய நபராகவும் பிரிவினைவாத நபராகவும் அடிக்கடி கருதுகின்றனர். இந்தநிலையில் தலாய் லாமா, தன்னுடைய இறப்பு சீனாவைக் காட்டிலும், சுதந்திர ஜனநாயகமுள்ள இந்தியாவில் நிகழவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தலாய் லாமா

யுனைடெட் ஸ்டேட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பீஸ்(USIP) அமைப்பு, ஹிமாச்சல பிரதேசம், தர்மசாலாவில் உள்ள தலாய் லாமாவின் இல்லத்தில், இளம் தலைவர்களுடனான இரண்டு நாள் நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்தது. அதில் இளம் தலைவர்களுடன் இன்று உரையாடிய தலாய் லாமா, “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், இன்னும் 15-20 ஆண்டுகள் நான் உயிர்வாழ்வேன், அதில் கேள்வியே இல்லை என்று முன்பு கூறியிருந்தேன். அதன்படி நான் இறக்கும் நேரத்தில், இந்தியாவில் இறப்பதையே நான் விரும்புகிறேன். ஏனெனில், இந்தியா முழுதும் உண்மையான அன்பு செலுத்தும் மக்களால் சூழப்பட்டிருக்கிறது. இதில் செயற்கையானவை எதுவுமில்லை. ஒருவேளை சீன அதிகாரிகள் சூழ நான் இறந்தால், அங்கு அது மிகவும் செயற்கையானவையாக இருக்கும். எனவே, சுதந்திர ஜனநாயகம் உள்ள இந்த நாட்டில் இறப்பதையே நான் விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

தலாய் லாமா

மேலும் ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்த தலாய் லாமா, “இறக்கும் சமயத்தில், உங்களுக்கு உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் நம்பகமான நண்பர்களால் சூழப்பட்டிருக்க வேண்டும்” என்று அதில் கூறியிருந்தார்.

1950-களில், திபெத்தை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்தபோது, ​​திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன்பிறகும் தலாய் லாமா தொடர்ச்சியாக திபெத் பிரச்னையை அமைதியான முறையில் தீர்க்க சீனாவுடன் நடுநிலைப் பேச்சுவார்த்தைக்கு வாதிட முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.