குறைந்த எடையிலான செயற்கை கால்கள் தயாரித்த இஸ்ரோ, தற்போது செயற்கை மூட்டு தயாரித்து சோதனை…

ஸ்ரீஹரிகோட்டா: விண்வெளியில் சாதனை படைத்து வரும் இஸ்ரோ நிறுவனம், செயற்கை கால்களையும் தயாரித்து சாதனை படைத்து வருகிறது. ஏற்கனவே இஸ்ரோ தலைவராக மறைந்த அப்துல் கலாம் இருந்தபோது, ஊனமுற்றோரின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் குறைந்த எடையில் செயற்கை கால்கள் தயாரித்து சாதனை படைத்த நிலையில், தற்போது அறிவார்ந்த செயற்கை மூட்டு தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் வசதியாக நடக்கும் வகையில், ஸ்பின்-ஆஃப் அறிவார்ந்த செயற்கை மூட்டை இஸ்ரோ உருவாக்கி உள்ளது. சுமார் 1.6 கிலோ எடையுள்ள நுண்செயலி-கட்டுப்படுத்தப்பட்ட (மைக்ரோ பிராசசர் இணைக்கப்பட்ட)  முழங்கால் (MPK Microprocessor-controlled knee)  ஆதரவுடன் நடக்கும் வகையில் இந்த மூட்டை தயாரித்துள்ளது.

முழங்காலுக்கு மேல்வரை கால்கள் செயல்படாத மாற்றுத்திறனாளி ஒருவருக்கு 1.6 கிலோ எடையுடன் கூடிய மைக்ரோ பிராசசர் பொருத்தப்பட்ட  செயற்கை மூட்டு பொருத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இஸ்ரோ வளாகத்தில் அந்த மாற்றுதிறனாளி சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு, நடக்க வைத்து பரிசோதனை செய்யப்பட்டது. இந்த செயற்கை கால்களில் உள்ள மைக்ரோ ப்ராசசர், டி.சி. மோட்டார், சென்சார் ஆகியவை இதனை பொருத்தி நடப்பவரின் தன்மைக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டு, நடப்பதை மிக எளிமையாக ஆக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த செயற்கை மூட்டு சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இஸ்ரோ தயாரித்த குறைந்த எடையில் செயற்கை கால்கள் ஊனமுற்ற குழந்தைகளுக்கு  பேருதவியாக இருந்து வருகிறது. 4 கிலோ எடையுடைய செயற்கை காலுக்கு பதிலாக வெறும் 400 கிராமில் செயற்கை கால்களை தயாரித்துக்கொடுத்து சாதனை படைத்தது. அந்த சாதனையின் தொடர்ச்சியாக தற்போது, செயற்கை மூட்டை தயாரித்து சாதனை படைத்துள்ளது.

இஸ்ரோ தற்போது தற்போது தயாரித்துள்ள செயற்கை மூட்டுடன் கூடியி  நவீன இலகு ரக செயற்கை கால்கள்,  விபத்து போன்ற காரணங்களால் கால்களில் மூட்டு பகுதிக்கு மேல் வரை துண்டிக்கப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த செயற்கை கால்கள் ஏற்கனவே சந்தையில் உள்ள செயற்கை கால்களை விட 10 மடங்கு விலை குறைவாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனை விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.