சென்னைக்கு ஆபத்தா? 5 ஆண்டுகளில் 29% பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படுமா?

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தற்போது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தைத் தொடர்ந்து, தமிழகம் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பேரிடர்களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டியது ஒரு புறம் இருந்தாலும், பேரிடர்களைத் தவிர்க்க காலநிலை மாற்றத்தையும் அதன் தீவிரத்தையும் உலக நாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே சூழலியல் ஆர்வலர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு. இந்த நிலையில் தான் சென்னைக்கான காலநிலை மாற்ற செயல்திட்டத்தின் வரைவு அறிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் வரும் 26-ம் தேதி வரை கருத்து சொல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அம்சங்கள் குறித்தும், இதில் இன்னும் சேர்க்கப்பட வேண்டியவை குறித்து சுற்றுச்சூழலுக்கான தன்னார்வ அமைப்பான பூவுலகின் நண்பர்கள் கூறுவது குறித்தும் தற்போது விளக்கமாகப் பார்க்கலாம்.

கடந்த 20 ஆண்டுகளாக நிகழ்ந்த நகரமயமாக்கல், சென்னையின் மக்கள் தொகை அதிகரித்ததோடு அதன் வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, வெள்ளப்பெருக்கு, கடல் மட்ட உயர்வு போன்றவை அதிகரித்துள்ளன. இந்த சவால்களைச் சமாளிக்க, காலநிலை மாற்றத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவும், கடந்த 2016-ம் ஆண்டு சென்னை C-40  அமைப்பில் இணைந்தது. C-40 என்பது காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உலகிலுள்ள 100-க்கும் மேற்பட்ட முன்னணி நகரங்கள் இணைந்த அமைப்பாகும். இந்த C-40 அமைப்பு மற்றும் நகர்ப்புற மேலாண்மை மையம் என்னும் தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து, சென்னை மாநகராட்சி ‘காலநிலை மாற்ற செயல்திட்ட’ வரைவறிக்கையைத் தயாரித்துள்ளது. 

’நெகிழ் திறனுடன் உந்துதலுடன் சென்னை’ என்ற தலைப்பில் தயாராகி உள்ள இந்த அறிக்கை, 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலையை அடைவது மற்றும் நீர் சுழற்சி பாதிக்காத வகையில் நீர் பயன்பாட்டை நெறிப்படுத்துவது ஆகியவற்றை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றை அடைய 6 துறைகளில் பல்வேறு திட்டங்களையும் இந்த அறிக்கை முன் மொழிந்துள்ளது. 

1. முதலாவதாக மின்சார உற்பத்தியில் கார்பன் பயன்பாட்டை அகற்றி புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகப்படுத்த 8 செயல்திட்டங்களை இந்த அறிக்கை முன் மொழிந்துள்ளது.

2. 2050-ம் ஆண்டுக்குள் அனைத்து கட்டிடங்களையும் சூரிய சக்தி உள்ளிட்ட ஆற்றல் திறன் கொண்ட கட்டிடங்களாக மாற்ற 8 செயல் திட்டங்கள் கூறப்பட்டுள்ளன

3. போக்குவரத்துத் துறையில் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இயங்கும் பொதுப் போக்குவரத்தை உருவாக்குவது, மக்களின் 80 சதவீதப் பயணங்களைப் பொதுப் போக்குவரத்து, மிதிவண்டி மற்றும் நடை பயணங்களாக மேற்கொள்ள 10 செயல்திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  

4. நிலையான கழிவு மேலாண்மையின் கீழ், பொதுமக்களிடம் இருந்து 100 சதவீதம் கழிவுகளைச் சேகரித்தல் மற்றும் அவற்றை வகை பிரித்தல், பொதுவெளியில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தவிர்க்க 11 செயல் திட்டங்களும் கூறப்பட்டுள்ளன.

5. வெள்ளம் மற்றும் நீர்ப்பற்றாக்குறையை நிர்வகிக்க 17 செயல்திட்டங்கள்

6. காலநிலை மாற்றத்தால் பாதிப்படையும்  நிலையில் உள்ள மக்கள் மற்றும் அவர்களின் ஆரோக்கியம் தொடர்பாக 12 செயல் திட்டங்களையும் இந்த வரைவு அறிக்கை விரிவாகப் பேசுகிறது. 

இவை ஒருபுறமிருக்க காலநிலை மாற்றத்தால் சென்னைக்கு ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்தும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் புயல்கள், வெப்பம் மற்றும் தண்ணீர் பஞ்சம், கடல் நீர் மட்ட உயர்வு ஆகிய அபாயங்கள் சென்னைக்குக் காத்திருக்கின்றன. 

வெள்ள பாதிப்புகளுக்கான எச்சரிக்கை : 

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படக்கூடிய வெள்ளத்தால் சென்னையின் 29 புள்ளி ஒரு சதவீத நிலப்பகுதியும், 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படக்கூடிய வெள்ளத்தால் சென்னையின் 46%  சதவீத நிலப்பகுதியும், 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படக்கூடிய வெள்ளத்தால் சென்னையின் 56 புள்ளி 5 சதவீத நிலப்பகுதியும் பாதிக்கக் கூடிய அபாயத்தில் உள்ளதாக இந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படக் கூடிய வெள்ளத்தால், 257 குடிசைப் பகுதிகளில் சுமார் 5 அடி உயரம் வரை தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதாகவும், இதனால் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதில், ராஜாஜி நகர், திடீர் நகர், திருவள்ளுவர் நகர் ஆகிய குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவர் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளை விட குடிசைப் பகுதிகளில் மக்கள்தொகை அடர்த்தி 2 மடங்கு அதிகம், அங்கு பாதிப்பு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடல் மட்ட உயர்வினால் ஏற்படும் பாதிப்புகள்

2100-க்குள் சென்னையின் 16 சதவீத நிலப்பகுதி அதாவது 67 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு நிரந்தரமாக கடலில் மூழ்கும். இதனால் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவர் என்பதே இந்த அறிக்கையின் எச்சரிக்கைகளில் முக்கியமான ஒன்று.

சென்னையில் உள்ள 275 குடிசைப் பகுதிகளில் 17 சதவீத குடிசைப் பகுதிகள் கடல் நீர் மட்ட உயர்வினால் பாதிக்கப்படும் எனப்படும். இதனால் 2 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அமைத்த 7,500 குடிசை மாற்றுவாரியக் குடியிருப்புகளும் கடல் மட்ட உயர்வினால் பாதிக்கப்படுவார்கள்.

கடல் நீர் மட்ட உயர்வினால் பொதுமக்கள் தங்களது வாழ்விடத்தை நிரந்தரமாக இழப்பர் என்பதே மிகப்பெரிய அபாயமாகும்.

அடுத்த 5 ஆண்டிற்குள் 7 செ.மீ. கடல் மட்ட உயர்வால் 100 சென்டி மீட்டர் கடற்கரைப் பகுதிகள் கடலில் மூழ்கும் எனக் கூறப்பட்டுள்ளது. வடசென்னை அனல்மின் நிலையமும் கடல்நீர் மட்ட உயர்வால் பாதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் வெப்பத்தின் பாதிப்புகள்

நீர்ப் பற்றாக்குறை காரணமாக 53 சதவீத வீடுகள் குடிநீருக்காக வெளிப்புற நீர் ஆதாரங்களை நம்பியுள்ளன. சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகளில் 27 சதவீத வீடுகளில் ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளே மேற்கூரையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த சென்னையில் 9 சதவீத வீடுகளில் ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது வெப்ப அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும். வெப்பத்தீவு விளைவின் காரணமாக இரவு நேரங்களில் குளுமை ஏற்படத் தாமதமாகலாம் எனவும், வெப்ப உயர்வின் காரணமாக தீ விபத்துகள், வெப்ப அழுத்தம் போன்றவை ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் குறைகளாக சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பான பூவுலகின் நண்பர்கள் சிலவற்றைச் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வரைவு அறிக்கை குறித்துப் பொதுமக்கள் தங்களது கருத்தைக் கூறலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும்,  இவ்வறிக்கை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. விளிம்பு நிலை மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவர் என அறிக்கையிலேயே கூறியுள்ள நிலையில், எளிய மக்களும் தங்களது கருத்தைத் தெரிவிக்கும் வகையில் தமிழிலும் வெளியிடப்பட வேண்டும்.  இந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள பல தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாகவும், தரவுகள் சரிவர விளக்கப்படாமலும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையின் பசுமை இல்ல வாயு உமிழ்வு குறித்துக் கூறும்போது அனல்மின் துறையினால் வெறும் 2 சதவீத பசுமை இல்ல வாயு மட்டுமே வெளியேறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மின் உற்பத்தியில் இருந்து வெளியேறும் பசுமை இல்ல வாயுக்களை மின் உற்பத்தியில் குறிப்பிடாமல், வீடுகளில் மின்சாரம் பயன்படுத்துவதால் ஏற்படுவதாகக் கூறுவது மக்களைக் குறை சொல்லி அனல்மின் நிறுவனத்தைக் காப்பாற்றும் தன்மையாகத் தெரிவதாகவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கூறியுள்ளது. 

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளான  வேலையின்மை, இடம் பெயர்தல், விளிம்பு நிலை மக்களுக்கு குறிப்பாக மீனவ மக்களுக்கு ஏற்படப் போகும் பொருளாதார இழப்புகள் ஆகியவை குறித்து இந்த அறிக்கையில் போதுமான அளவில் பேசப்படவில்லை.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படப் போகும் பிரச்சினைகள்  அனைவருக்கும் பொதுவானது என்றாலும், அப்பிரச்சினைகளின் தாக்கம் சமூகக் கட்டமைப்பில் பல்வேறு அடுக்குகளில் இருக்கும் ஒவ்வொருவரையும் வெவ்வேறு விதமாக பாதிக்கும் என்பதால், அதற்கேற்றவாறு இந்த அறிக்கை தயாரிக்கப்படாதது வருத்தம் அளிப்பதாகவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கூறியுள்ளது. சென்னையில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் வடசென்னை, வல்லூர் அனல் மின் நிலையங்கள் ஆகியவை எவ்வளவு பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுகின்றன என்ற தரவுகளையும், சென்னையை அனல் மின் நிலையம் அற்ற பகுதியாக மாற்றுவதற்கான கால அளவுகளோடு கூடிய செயல் திட்டதையும் இந்த சென்னை காலநிலை மாற்ற திட்டத்தில் சேர்க்க வேண்டும் எனவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.