6 பேரை கழட்டி விட்டு 7 வது திருமணம்.. சிக்கினார் மதுரை சந்தியா..!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால்(35). இவருக்கும், மதுரையைச் சேர்ந்த சந்தியா(26 ) என்பவருக்கும் கடந்த 7-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, பெண் வீட்டாராக பெண்ணின் அக்கா, மாமா எனக்கூறி இருவரும், மதுரையைச் சேர்ந்த புரோக்கர் பாலமுருகன்(45) என்பவர் உட்பட 3 பேர் மட்டுமே வந்திருந்தனர். திருமணம் முடிந்ததும் புரோக்கர் பாலமுருகன் கமிஷன் தொகையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு சென்றுள்ளார்.

புதுமணத் தம்பதிகள் தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடங்கினர். இந்நிலையில், கடந்த 9-ம் தேதி காலை புதுமாப்பிள்ளை தனபால் எழுந்து பார்த்த போது, மனைவி சந்தியாவை காணவில்லை. பல்வேறு பகுதிகளில் தேடிப் பார்த்தும் சந்தியாவை கண்டுபிடிக்க முடியவில்லை. அவருடைய செல்போனில் தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆஃப்’ என்று வந்தது. இதேபோல், புரோக்கர் பாலமுருகன், உறவினர்களாக வந்தவர்களின் செல்போனும் ‘சுவிட்ச் ஆஃப்’ என வந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த தனபால் உடனடியாக வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தார். அப்போது, சந்தியாவின் திருமண பட்டு புடவை உட்பட அவர் கொண்டு வந்த துணிமணிகள் அனைத்தும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தனபால், பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்ய புரோக்கர் மூலம் மணமகள் தேடியுள்ளனர். அப்போது அந்த புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ வந்துள்ளது. அதைப் பார்த்து உஷாரான அவர்கள், திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து, மதுரையைச் சேர்ந்த பெண் புரோக்கர் தனலட்சுமி(45) என்பவடம் பேசியுள்ளனர். மேலும், மணமகன் போட்டோவை புரோக்கரிடம் கொடுத்துள்ளனர். மணமகளுக்கு மாப்பிள்ளையை பிடித்துள்ளது என பேசி போன் மூலமே முடிவு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, இன்று காலை திருச்செங்கோட்டில் திருமணம் நடத்துவதாக முடிவு செய்து, சந்தியா, தனலட்சுமி உறவினர் ஐயப்பன் ஆகியோர் திருச்செங்கோட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அங்கு காத்திருந்த பாலமுருகன் மற்றும் உறவினர்களிடம் சந்தியா சிக்கிக்கொண்டார். மேலும், பெண் புரோக்கர் தனலட்சுமி உறவினர் ஐயப்பன் ஆகியோரை தனபால் மற்றும் அவரது உறவினர்களின் சுற்றி வளைத்துப் பிடித்து பரமத்தி வேலூர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகின.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘மதுரை சேர்ந்த இவர்கள், சந்தியாவுக்கு ஆறு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஒவ்வொரு திருமணத்தின் போதும் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு இரண்டு நாள் மாப்பிள்ளையிடம் நெருங்கி பழகிவிட்டு, கணவன் நன்கு தூங்கிக் கொண்டிருக்கும் போது உடைமைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 7-வது திருமணம் நடக்க இருந்தபோது சிக்கிக் கொண்டனர். மதுரையை சேர்ந்த புரோக்கர்கள் மூலம் இதுபோல் மோசடிகள் அதிக அளவில் நடைபெற்று வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.