தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிர்வாகத்தில் ஸ்திரத்தன்மையை கொண்டு வந்தது – பிரதமர் நரேந்திர மோடி தகவல்

புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொள்கை உருவாக்கம், நிர்வாகத்தில் ஸ்திரத்தன்மையை கொண்டு வந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் உள்ள பேடில் மைதானத்தில் நேற்று பாஜக சார்பில் யுவ விஜய் சங்கல்ப யாத்திரை நடைபெற்றது. இந்த பேரணியை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கிவைத்தார்.

பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:

பல தசாப்தங்களாக நாட்டில் கூட்டணி அரசுகள்தான் ஆட்சி செய்தன. இதனால் அவை சரியாக செயல்பட முடியுமா இல்லையா என்ற நிச்சயமற்ற சூழ்நிலை இருந்தது. அதன் காரணமாக உலக மக்கள் நமது நாட்டின் மீது சந்தேகம் கொண்டிருந்தனர். 2014-ல், பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்தது.

அதன் பின்னர் நாடு வளர்ச்சி அடைந்தது. இதையடுத்து நாட்டில் கொள்கை உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் ஸ்திரத்தன்மையை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டு வந்தது. மத்தியில் வலுவான அரசு இருக்க வேண்டியதன் அவசியம் தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் பல்வேறு மாநிலங்களில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தனர். ஆனால் உத்தரபிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் ஆட்சி செய்ய பாஜகவுக்கு மீண்டும் வாய்ப்பை வழங்கியுள்ளனர். எனவே நிலையான அரசு இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் நெடுஞ்சாலைகளை அமைக்க ரூ.14 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அண்மையில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஹட்டி சமூகத்தினரை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த சமூக மக்களுக்கு தேவையான பயன்கள் மத்திய அரசு மூலம் கிடைக்கும்.

எல்லையையொட்டி அமைந்துள்ள கிராமங்களின் வளர்ச்சிக்காக ரோப்வே திட்டத்தையும் நாங்கள் கொண்டு வந்துள்ளோம். இங்கு சுற்றுலாத்துறை தொடர்ந்து விரிவாக்கம் பெற்று வருகிறது. இது உற்சாகம் அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது.

மாநிலத்தில் அமைந்துள்ள பாஜக அரசு, கரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்திலும் சிறப்பாக செயல்பட்டது. இந்த காலத்திலும் உத்தராகண்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-விசா உள்ளிட்ட வசதிகளை சிறப்பாக வழங்கி, சுற்றுலாத் துறையினரும், அதைச் சார்ந்தவர்களும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டது.

இமாச்சல பிரதேசத்தில் விளையாட்டாக இருந்தாலும் சரி, கலையாக இருந்தாலும் சரி, மாநில இளைஞர்களின் ஆர்வமும் திறமையும் தேசத்துக்கு பயனளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.