அனிருத்தின் தாத்தாவும் இசையமைப்பாளருமான எஸ்.வி.ரமணன் மறைவு

இசையமைப்பாளரும், இயக்குனருமான எஸ்.வி. ரமணன்(87) வயது மூப்பு காரணமாக காலமானார். இவர் பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் தாத்தா ஆவார்.

1930 – 40களில் தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கி புகழ்பெற்றவர் கே. சுப்ரமணியம். இவரது மகனான எஸ்.வி. ரமணன் சினிமாவில் பல துறைகளிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். ரேடியோ விளம்பரங்களில் பல புதுமைகளை புகுத்திய இவர் ஆயிரக்கணக்கான வானொலி விளம்பரங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட ஆவண படங்களை தயாரித்த இவர், ரமண மகரிஷி, சீரடி சாய்பாபா ஆகிய ஆன்மிக ஞானிகள் பற்றி ஆவணப் படங்கள் இயக்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

இசை ஜாம்பவான்களான சலீல் சவுத்ரி(படங்கள் : செம்மீன், ஜல்தீப்), சிஎன்.பாண்டுரங்கன் (எதிர்பாராதது, பாண்டித் தேவன்) ஆகியோரிடம் உதவியாளராக இவர் பணியாற்றி உள்ளார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பிறகு ஒய்ஜி.மகேந்திரன், சுஹாசினி நடித்த உருவங்கள் மாறலாம் என்ற படத்தை இயக்கி, இசையமைக்கவும் செய்தார். இந்த படத்தில் வரும் ‛ஆண்டவனே உன்னை' என்ற பாடலை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனை மூலம் பாட வைத்து அழகு பார்த்தார்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் வசித்து வந்த எஸ்.வி. ரமணன் வயது மூப்பு காரணமாக காலமானார். ரமணனுக்கு பாமா என்ற மனைவியும் லட்சுமி, சரஸ்வதி என இரு மகள்களும் உள்ளனர். இவர்களின் லட்சுமியின் மகன் தான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ள அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.

ரமணனின் சகோதரிகளில் ஒருவரான டாக்டர் பத்மா சுப்ரமணியம் பிரபல பரதநாட்டிய கலைஞர் ஆவார். இவரது சகோதரரான டாக்டர் கிருஷ்ணசுவாமி குறும்பட இயக்குனர் ஆவார். மற்றொரு சகோதரரான அபஸ்வரம் ராம்ஜி இசைக்கலைஞர் மற்றும் பத்திரிக்கையாளர் ஆவார். குழந்தைகளை மையமாக வைத்து மேடை இன்னிசை இசை நிகழ்ச்சி நடத்தி மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

எஸ்.வி.ரமணன் இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.