ஜெயலலிதா திட்டங்களை நிறுத்திய எடப்பாடி: குற்றம் சாட்டும் பிடிஆர்

லஞ்ச ஒழிப்பு துறையில் அதிகப்படியான வழக்குகள் குவிந்து வருகிறது, விரைவில் முன்னாள் அமைச்சர்கள் விளைவுகளை சந்திப்பார்கள் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

மதுரை மத்தியத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியில் கணேசபுரம் தெருவில் 8.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பேவர் பிளாக் சாலையை நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

தொடர்ந்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “வளர்ச்சி, நிதி மேலாண்மை முக்கியம் என்ற போதிலும் மனிதாபிமான முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி பல்வேறு முகாம்கள் அமைத்து அவர்கள் நலனுக்கு மும்முரமாக பணியாற்றி வருகிறோம்.

எனக்கு முதல்வர் அளித்துள்ள துறைகளில் மனிதவள மேலாண்மை துறையில் தகவல் அறியும் உரிமை சட்டம், தமிழ்நாடு அரசு பணியாளார் தேர்வாணையம், லஞ்ச ஒழிப்பு துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கொண்டுள்ளது.

இவற்றில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு இதுவரை இல்லாத அளவிற்கு நிதி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் லஞ்ச ஒழிப்புத் துறையில் பல்வேறு வழக்குகள் குவிந்து வந்துகொண்டிருக்கின்றன. அதனை பொதுவெளியில் சொல்ல முடியாது. விரைவில் விளைவுகளை சந்திப்பார்கள்.

தேவையற்ற விவாதங்களை உருவாக்கும் பொய்யான தகவல்கள் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசி வருகிறார். குறிப்பாக அவர், சிறந்த ஆன்மீகவாதி , முன்னாள் முதல்வருக்கு கோவில் கட்டி சில ஆண்டுகள் செருப்புகூட போடாமல் இருந்தவர். தற்போது அவர்களை தற்போது மறந்தது போன்று உள்ளார்.

அமைச்சராக இருந்தவர் தவறான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மின்சார கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வும் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது அதனை கடந்த ஆண்டு நிதி பற்றாக்குறை ஒப்பிட்டு பேசுவது அடிப்படை புரிதல் இல்லாதது.

குறிப்பாக இலவச லேப்டாப் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கல் திட்டம் உள்ளிட்டவைகள் அதிமுக ஆட்சியில் நிறுத்தி விட்டனர்.

இந்தநிலையில் தாலிக்கு தங்கம் திட்டத்தை மாற்று பெயரில் கல்லூரி மாணவிகளுக்கு உதவி தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தாலிக்கு தங்கம் நான்கு ஆண்டுகளாக வழங்காமல் இருந்து வந்தது அதிகப்படியான மனுக்களை குவிந்தது.

முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில் வருவாய் பற்றாக்குறை இல்லாத சராசரி மாநிலமாக இருந்தது. 2016 க்கு பிறகு செயல்திறன், நிதி மேலாண்மை திறன் இல்லாத அரசாக இருந்துவிட்டு தற்போது எங்களை குறை சொல்வது தவறானது.

ஒன்றிய அரசின் பொது நிதியில் இருந்து பெரும் கடன் தொகையை கடந்த ஆட்சியில் எல்லை மீறி 30,000 கோடிக்கு மேல் சுருட்டி கொண்டனர். கூட்டணி கட்சி என்ற முறையில் டாடி இவர்களை கேள்வி கேட்கவும் இல்லை தண்டிக்கவுமில்லை,

கடந்த அதிமுக அரசு நிலுவையில் வைத்திருந்த 62,000 கோடி வருவாய் பற்றாக்குறையை 47,000 கோடியாக குறைத்துள்ளோம்,

திமுக சட்டமன்ற உறுப்பினர்களே இந்த ஆட்சியில் நிதி மேலாண்மை சரி இல்லை என்று உதயகுமாரிடம் குறை சொல்கிறார்கள் என்று சொல்வது நம்பகத்தன்மையற்றது.

பொய்யான தரவுகள், அடிப்படை புரிதல் இல்லாதவற்றை மக்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் வெளியிடுவது சரியானது இல்லை.

நிதிநிலைமை சீர் செய்வது என்பது வருவாயில் பற்றாக்குறை இல்லாமல் இருப்பதே, எட்டு வருடம் அதிமுக ஆட்சியில் சரிய விட்ட வருவாய் பற்றாக்குறையை மூன்று நான்கு ஆண்டுகளில் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் கொண்டு வருகின்ற நிலையில், பெண்கள் இலவச பஸ் பயணம், பொங்கல் பரிசு, காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம்.

மாநில அரசின் நிதி கொண்டு சமூகநீதிக்கு உட்பட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். உதாரணமாக காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும் விரிவு படுத்த வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது. அதற்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் ” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.