லண்டனில் விலையுயர்ந்த காபி அருந்திய பாக். அமைச்சர்- ’வெட்கக்கேடு’ என விமர்சித்த இம்ரான் ஆதரவாளர்கள்

லண்டன்: லண்டனில் விலையுயர்ந்த காபி அருந்திய பாகிஸ்தான் அமைச்சர் மரியம் அவுரங்கசீப்பை இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சமாம் கட்சி ஆதரவாளர்கள் வசைபாடி துரத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மரியம் அவுரங்கசீப். இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஒரு காபி ஷாப்பில் விலையுயர்ந்த காபி வாங்கி அருந்திக் கொண்டிருந்தார். அவர் அருந்திய காபியின் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ரூ.2000 எனத் தெரிகிறது. அப்போது அங்கு திரண்ட பாகிஸ்தானியர்கள் சிலர், தேசம் கடும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலரை காணவில்லை. நீங்கள் லண்டனில் காபி அருந்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறி அவரை வசைபாடினர்.

அமைதி காத்த அமைச்சர்: அத்தனை வசவுகளையும் சலனமே இல்லாமல் அமைதியாகக் கடந்து சென்றார் அமைச்சர் மரியம் அவுரங்கசீப். கடையை விட்டு அவர் தெருவில் இறங்கி நடந்தபோதும் அவரை சிலர் பின்தொடர்ந்தனர். அப்போது ஒரு பெண் அமைச்சரின் கையில் இருந்த விலை உயர்ந்த கோப்பையை சுட்டிக்காட்டி விமர்சித்தார். இன்னொரு பெண், ‘நீங்கள் பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் பேசும்போது அதைச் செய்வேன், இதைச் செய்வேன் எனக் கூறுகிறீர்கள். ஆனால் இங்கே வந்து விலையுயர்ந்த பொருட்கள், உணவு என சுற்றுகிறீர்கள். உங்கள் தலையில் துப்பட்டா கூட இல்லை’ என்று விமர்சித்தார். அப்போது அமைச்சர், ‘நீங்கள் நடந்துகொள்ளும் விதம் சர்வதேச அளவில் பாகிஸ்தானின் அடையாளத்தை சிதைக்கும். நீங்கள் என்னிடம் மூன்று கேள்விகள் கேட்டீர்கள். நான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிவிட்டேன். இதுதான் நாகரிகமான விவாதத்திற்கான வழி’ என்று கூறிச் சென்றார்.

வெறுப்பை விதைக்காதீர்கள் இம்ரான்: ஆனால், மரியம் அவுரங்கசீப் அத்துடன் அமைதியாக இருந்துவிடவில்லை. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இங்கு நடந்த அனைத்திற்கும் காரணம் பிடிஐ கட்சி நிறுவனர் இம்ரான் கான் தான். அவரைப் போன்ற விஷமிகள் அரசியலில் இருப்பது ஆபத்தானது. இம்ரான் கான் வெறுப்பையும் பிரிவினைவாதத்தையும் விதைத்து சகோதர, சகோதரிகளிடம் பிளவை உண்டாக்குகிறார். நான் என்னை மோசமாக நடத்தியவர்களிடமும் அமைதியாக இருந்தேன். அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்துள்ளேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.