தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளரை தேர்வு செய்ய அக்.9-ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது: மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியீடு

சென்னை: திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளரை தேர்வு செய்வதற்காக அக்.9-ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு சென்னையில் கூடுகிறது. இதனிடையே, புதிதாக தேர்வு செய்யப்பட்ட திமுக மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் நேற்று மாலை மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்டங்களில் வெளியானது.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தலை நடத்தி தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் அடங்கிய அறிக்கையை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த வகையில், திமுகவில் அமைப்பு ரீதியிலான 15- வது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. பேரூர், ஒன்றியம், நகரம், மாநகரம், பகுதி, வட்டம் என பல்வேறு மட்டங்களில் நிர்வாகிகள் தேர்வு முடிந்துள்ளன. இறுதிகட்டமாக, மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான மனு தாக்கல் கடந்த செப்.22 முதல் 25-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது. கட்சி நிர்வாக ரீதியிலான 72 மாவட்டங்களுக்கு ஒரு மாவட்டத்துக்கு தலா 12 பதவிகளுக்கு மனுக்கள் பெறப்பட்டன.

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வருவதால், கட்சியை முழுமையாக கட்டமைக்க திமுக தலைவரான முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். அதன்படி, தற்போதுள்ள மாவட்டச் செயலாளர்களில் 90 சதவீதம் பேரை அப்படியே வைத்துக் கொண்டு, 10 சதவீதம் பேரை மாற்ற முடிவெடுத்தார். இதனால், பல மாவட்டங்களுக்கு கட்சித் தலைமை சுட்டிக் காட்டியவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, நெல்லை, தருமபுரி, தேனி, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் போட்டி மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன. தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளரை மாற்றக் கூடாது என்று கட்சியினர் தர்ணா நடத்தினர்.

கடந்த இரு தினங்களாக மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது, போட்டி மனுக்களை அளித்தவர்களிடம் மூத்த நிர்வாகிகள் பேசி அவர்களை சமாதானம் செய்தனர். இந்நிலையில், நேற்று மாலை மாவட்ட வாரியாக, அந்தந்த மாவட்டங்களில் திமுக மாவட்டச் செயலாளர்கள் உட்பட 12 நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. 72 மாவட்டச் செயலாளர்களில் 64 பேர் ஏற்கெனவே அந்தப் பொறுப்பில் உள்ளவர்கள் என்றும், 7 பேர் புதியவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தென்காசி வடக்கில் மாவட்ட பொறுப்பாளர் செல்லதுரை தரப்பினர் அவருக்கே வழங்க வேண்டும் என்று தெரிவித்து வருவதால், அது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்கிறது.

புதியவர்களை பொறுத்தவரை, தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த ஏனாதி பாலசுப்பிரமணியத்துக்கு பதில் அண்ணாதுரையும், தருமபுரி மேற்கு மாவட்டத்தில் இன்பசேகரனுக்கு பதில் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனும், கிருஷ்ணகிரி கிழக்கில் செங்குட்டுவனுக்கு பதில் பர்கூர் மதியழகனும், திருவள்ளூர் மேற்கில் பூபதிக்கு பதில் சந்திரனும், கோவை வடக்கில் ராமச்சந்திரனுக்கு பதில் தொண்டாமுத்தூர் ரவியும், கோவை தெற்கில் வரதராஜனுக்கு பதில் தளபதி முருகேசனும், நாமக்கல் மேற்கில் மூர்த்திக்கு பதில் மதுரா செந்திலும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர, திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளராக அமைச்சர் சா.மு.நாசர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் கிழக்கு – டி.ஜெ.கோவிந்தராஜன், காஞ்சிபுரம் வடக்கு – அமைச்சர் தா.மோ.அன்பரசன், தெற்கு – எம்எல்ஏ சுந்தர் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

மாவட்டச் செயலாளர் தேர்தல் முடிவுற்றுள்ள நிலையில், திமுக பொதுக்குழு அக்.9-ம் தேதி சென்னையில் கூடுகிறது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், தணிக்கைக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய, திமுகவின் 15-வது பொதுத்தேர்தலில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் அக்.9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.