இன்னும் எத்தனை நாள் தமிழக மீனவர்கள் இலங்கையினரால் துயரம் அனுபவிப்பார்கள்-நீதிபதிகள் கேள்வி

இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உள்ளிட்ட துயரங்களை அனுபவிப்பார்கள்? என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும், இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிட கோரியும், உச்ச நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கே.கே ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த விவகாரம் உச்சநீதிமன்ற விசாரணை வரம்புக்குள் வருமா? என கேள்வி எழுப்பினர். மேலும் இந்திய மீனவர்கள் எத்தனை பேர் இலங்கை சிறையில் உள்ளனர்? எத்தனை பேர் விடுவிக்க பட்டுள்ளார்கள்? உள்ளிட்ட விவரங்களை 2 வாரத்தில் தெரிவிக்குமாறு கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.
image
இந்நிலையில் இன்று இந்த வழக்கு அணிருத்தா போஸ், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இது இரண்டு நாடுகளுக்கு இடையிலான ராஜாங்க உறவு குறித்த விவகாரம் இதை ரிட் மனுக்கள் மூலமாக உச்சநீதிமன்றம் விசாரிக்க முடியாது என வாதிடப்பட்டது. அப்போது பேசிய நீதிபதிகள் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உள்ளிட்ட துயரங்களை அனுபவிப்பார்கள்? என கேள்வி எழுப்பியதோடு, தமிழக மீனவர்களின் துயர் துடைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன எனவும் கேட்டனர்.
image
மேலும் இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறையிடம் கேட்டு சொல்வதற்கு கால அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கேட்ட போது அதை ஏற்றுக்கொண்டு, வழக்கை அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.