அதிவேக அலைக்கற்றை 5 ஜி நடைமுறைக்கு வந்தது… ஆனால், சேவை எப்படி இருக்கும்..?

இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5 ஜி இணைய சேவை இன்று டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர், 5 ஜி இணைய சேவை வேகம் எப்படி இருக்கும் என்பதை பிரதமர் மோடிக்கு ஆகாஷ் அம்பானி நேரில் விளக்கிக் காட்டினார்.

5 ஜி சேவை

தொலைத்தொடர்பின் திருப்புமுனையாக இருக்கும் 5 ஜி சேவை, நாட்டின் முக்கிய நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்படும். பின்னர், அடுத்த சில ஆண்டுகளில் படிப்படியாக விரிவு படுத்தப்படும். இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார தாக்கம் 2035 ஆண்டில் சுமார் ரூ.35 லட்சம் கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது நடைமுறையில் உள்ள 4 ஜி சேவையைவிட 100 மடங்கு வேகத்தை 5ஜி வழங்குகிறது. தடைஇல்லாத இணைப்பு, தரவுகளை நொடியில் பகிரும் வேகம், கோடிக்கணக்கில் இணைக்கப்பட்ட சாதனங்களை இயக்கும் ஆற்றல் திறன், அலைக்கற்றை திறன் உள்ளிட்டவை நெட்வொர்க் செயல் திறனை அதிகரிக்கச் செய்யும்.

ஒரு வீடியோவை வேகமாக டவுன்லோடு செய்ய 5 ஜிஉதவும். பிற சாதனங்கள் இணைப்பு வசதி, மெமரி கார்டு, பென் டிரைவ் இல்லாது உங்கள் தரவுகளை சேமிக்கும் கிளவுட் வசதியென மேம்பட்ட வசதியைக் கொண்டது.

2018 முதல் ஐ.ஐ.டி.கள், பெங்களூர் விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவனம், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் இவற்றின் தீவிர ஆய்வுக்குப் பிறகு 5 ஜி சேவையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

5 ஜி சேவை

5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் விடப்பட்டது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன், ஐடியா போன்ற நிறுவனங்களுடன் அதானியின் நிறுவனம் சுமார் 26 ஜிகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 5 ஜி அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்தது. இந்த ஏலம் மூலம் அரசுக்கு ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. 5-ஜி அலைக்கற்றைகள் ஏலம் விட்ட நிலையில், இன்று பயன்பாட்டுக்கு வந்தது. பிரதமர் மோடி இந்தச் சேவையைத் தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய மெட்ரோ நகரங்களில் சேவை தொடங்கப்பட்டு, பின்னர் ஹைதராபாத், பெங்களூரு, புனே, அகமதாபாத், காந்திநகர், சண்டிகார், குர்கிராம், ஜாம்நகர், லக்னோ ஆகிய நகரங்களிலும் 5-ஜி சேவை விரிவாக்கம் செய்யப்படும். அடுத்து நாடு முழுவதும் படிப்படியாக எல்லா நகரங்களுக்கும் இந்தச் சேவை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பாரதி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் பாரதி மித்தல், “நான்கு மெட்ரோ நகரங்கள் உட்படஎட்டு நகரங்களில் 5 ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் தொடங்கியுள்ளது. 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கும் பெரும்பாலான பகுதிகளில் 5 ஜி சேவை கிடைக்கும். 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் 5 ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் வழங்கும்’ என்றார்.

5ஜி தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தபின் நமது வாழ்க்கையில் பல நிகழ்வுகள் இன்னும் விறுவிறுப்பாக மாறும் என எதிர்பார்ப்போம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.