காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசிதரூர், கார்கே போட்டி! தேர்தல் செயலாளர் அறிவிப்பு

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளதாகவும், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்று தேர்தல் செயலாளர் மதுசூதன் மிஸ்திரி அறிவித்து உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல்  24ந்தேதி தொடங்கி 30ந்தேதி (நேற்று) உடன் நிறைவு பெற்றது.  வேட்புத்தாக்கலின் கடைசி நாளான நேற்று  மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் அக்டோபர் 1-ம் தேதி பரிசீலனை செய்யப்பட்டு அன்றைய தினமே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி வேட்புமனு பரீசலனை செய்யப்பட்டு தேர்வு செய்யபட்ட வேட்புமனுக்களாக கார்கே மற்றும் சசிதரூர் மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் குழு செயலாளர் மதுசூதன் மிஸ்திரி, தலைவர் பதவிக்கான தேர்தலில் மொத்தம் 20 வேட்புமனு படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில், கையொப்ப பிரச்சனை காரணமாக ஆய்வுக் குழு 4 படிவங்களை நிராகரித்தது. திரும்பப் பெறுவதற்கு அக்டோபர் 8 வரை அவகாசம் உள்ளது, அதன் பிறகு தெளிவாகத் தெரியும். யாரும் வாபஸ் பெறாவிட்டால் வாக்குப்பதிவு தொடங்கும் என்றார்.

இதனால், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. எனவே, அக்.8-ஆம் தேதிக்குள் யாரும் வாபஸ் பெறவில்லை என்றால், அக்.17ம் தேதி  வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.