தரமற்ற பொருட்களை விநியோகித்த நிறுவனங்களுடன் மீண்டும் ஒப்பந்தமா? – மநீம கண்டனம்!

ரேஷன் கடைகளுக்கு தரமற்ற பொருட்களை விநியோகித்த நிறுவனங்களுடன் மீண்டும் ஒப்பந்தமா என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் பருப்பு, ரவா, கோதுமை ,வெல்லம், நெய், அரிசி, கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் பொருட்கள் தரமற்று இருப்பதாக புகார்கள் எழுந்தன.

இது முதல்வரின் கவனத்திற்கு செல்ல தரமற்ற உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் பொருட்களை வாங்க இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கு தரமற்ற பொருட்களை விநியோகித்த நிறுவனங்களுடன் மீண்டும் ஒப்பந்தமா என்று நடிகர் கமல் ஹாசனின், மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:

தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தின்போது, தரமற்றப் பொருட்களை விநியோகித்ததாக 6 நிறுவனங்களுக்கு ரூ.3.75 கோடி அபராதம் விதித்து அரசு உத்தரவிட்டது. குறிப்பாக, 3 நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.2.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அதே நிறுவனங்களுக்கு மீண்டும் ரேஷன் பொருட்களை வழங்க ஒப்பந்தம் அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. சுமார் 4 கோடி லிட்டர் பாமாயில், ஒரு லட்சம் டன் பருப்பு விநியோகிக்க அந்த நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மீண்டும் ரேஷன் பொருட்களுக்கான ஆர்டர் கொடுக்க முடிவு செய்திருந்தால், அதை மக்கள் நீதி மய்யம் கடுமையாக கண்டிக்கிறது. மக்களுக்கு தரமான ரேஷன் பொருட்களை விநியோகிப்பதிலும், அதில் ஊழல் இல்லாமல் பார்த்துக் கொள்வதிலும் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.