திருமலையில் கருட சேவை 3 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்| Dinamalar

திருப்பதி:திருமலையில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு நடந்த கருட சேவையைக் காண, மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர்.திருமலையில் நேற்றிரவு, பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவையில் மலையப்ப சுவாமி எழுந்தருளி சேவை சாதித்தார். இதைக் காண, ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர்.
காலை முதல் அனைவரும் மாடவீதியில் ‘கேலரி’ களில் காத்திருந்தனர். அவர்களுக்கு தேவஸ்தானம் உணவு, குடிநீர், பால், சிற்றுண்டி உள்ளிட்டவற்றை வழங்கியது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்று காரணமாக, வருடாந்திர பிரம்மோற்சவம் கோவிலுக்குள் மட்டுமே நடத்தப்பட்டது. எனவே, இம்முறை பக்தர்கள் கருட சேவையை காண அதிக அளவில் திரண்டனர்.

பரிகாரம்

புராண சூழலில், 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களிலும் கருட சேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கருட வாகனத்தின் மூலம் சுவாமி தாசானுதாச பிரபாதிக்கு அடிமை என்று தெரிவிக்கிறார். மேலும், ஞானம் பெற விரும்பும் மனிதர்கள், அறியாமையின் சிறகுகளுடன் வலம் வரும் கருடனை தரிசித்தால் சகல பாவங்களும் நீங்கும் என்பதை இந்த வாகனம் மூலம் பக்தர்களுக்கு உணர்த்துகிறார்.இந்நிலையில், மலையப்ப சுவாமி, தங்க கருட வாகனத்தில், நவரத்தினங்களால் ஆன விலையுயர்ந்த ஆபரணங்களுடன், மகரகண்டிகை, 1,008 காசுகளால் ஆன, நான்கு வரிசை கொண்ட மாலை, திருவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிய மாலை ஆகியவற்றை அணிந்திருந்தார். சென்னையிலிருந்து எடுத்து வரப்பட்ட வெண்பட்டு திருக்குடைகளை பிடித்தபடி மலையப்ப சுவாமி, வைகுண்ட நாதனாக எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். மாலை 7:00 மணிக்கு துவங்கிய வாகன சேவை நள்ளிரவு 1:00 மணி வரை நீடித்தது. அனைவரும் நிதானமாக தரிசிக்க தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்தது.

32 வகை பிரசாதங்கள்

அதோடு நள்ளிரவு வரை பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கியது. வாகன சேவை முடிந்தவுடன், மலையப்ப சுவாமிக்கு 32 வகையான பிரசாதங்கள் நெய்வேத்தியம் செய்யப்பட்டன. பின், கும்ப ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி மற்றும் கற்பூர ஆரத்தி உள்ளிட்டவை அளிக்கப்பட்டது. வாகன சேவைக்கு முன் வேத கோஷமும், பின் பல மாநிலங்களிலிருந்து வந்த கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. இந்த வாகன சேவையில் திருமலை ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.