இந்திய வரலாற்றில் இருண்ட ஆண்டு 1984: அமெரிக்க செனட்டர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: சீக்கிய கலவரம் நடந்த 1984ம் ஆண்டு, இந்தியாவின் நவீன வரலாற்றில், இருண்ட ஆண்டாக அமைந்து விட்டதாக அமெரிக்க செனட்டர் பாட் டூமே கூறியுள்ளார்.

கடந்த 1984ம் ஆண்டு, அக்.,31ம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா, சீக்கிய சமுதாயத்தை சேர்ந்த பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து டில்லி உள்ளிட்ட பல நகரங்களில் சீக்கியர்களை குறி வைத்து கலவரம் வெடித்தது. அதில் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இருந்து தேர்வான செனட்டரான பாட் டூமே, அமெரிக்க சீக்கிய காங்கிரஸ் அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார்.

சீக்கிய கலவரம் தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியாவின் நவீன வரலாற்றில் 1984ம் ஆண்டு இருண்ட ஆண்டாக அமைந்துவிட்டது. இந்தியாவில் பழமைவாத குழுக்கள் இடையே வன்முறை ஏற்பட்டதை உலகம் பார்த்துள்ளது. அதில், பல சீக்கிய சமுதாயத்தை குறிவைத்து நடந்துள்ளது. இந்த கலவரத்தால், பலாத்காரம், கொலை, இடம்பெயர்தல் உள்ளிட்ட பல பாதிப்புகளால் 30 ஆயிரம் சீக்கிய ஆண்கள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்களை தடுக்க, அவர்களின் கடந்த காலங்களை அங்கீகரிக்க வேண்டும். சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். அப்போது தான், அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

latest tamil news

மேலும், இது போன்ற துயரங்களால் சீக்கிய சமுதாயம் மற்றும் உலகில் உள்ள பல்வேறு தரப்பினர் வருங்காலங்களில் இது போன்று மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், சீக்கிய சமுதாயம் 600 ஆண்டு வரலாறு கொண்டது. உலகம் முழுவதும் 3 கோடி பேர் வசிக்கின்றனர். அமெரிக்காவில் 7 லட்சம் பேர் வசிக்கின்றனர். கோவிட் பெருந்தொற்று காலத்தில் அமெரிக்காவில் சீக்கிய சமுதாயத்தினர் பலசரக்கு பொருட்கள், மாஸ்க்குகள் உள்ளிட்டவற்றை மதம், பேதம் பார்க்காமல் விநியோகம் செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.