அன்பு, அகிம்சை, அமைதி… கூடவே எளிமை அவர்தான் காந்தி! – பிறந்த தின சிறப்புப் பகிர்வு

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் ‘காந்தி ஜெயந்தி’ என ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 2-ம் தேதி தேசம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆகவே, இன்றைக்கு டெல்லி ராஜ்காட்டில் அமைந்திருக்கும் காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதுபோல, இந்தியா முழுவதும் காந்தி இன்று ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

காந்தி

மகாத்மா காந்திக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனாலும், அவரது வாழ்க்கைப் பாடத்தையும், விடுதலைப் போராட்டத்தில் அவரது மகத்தான பங்களிப்பையும் தியாகங்களையும் அடுத்த தலைமுறையினருக்குச் சொல்ல வேண்டியது முக்கியம். ஆங்கிலேய ஆட்சியாளர்களை இந்தியாவிலிருந்து துரத்தியடித்த விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த காந்தி, இந்தியாவின் தேசத்தந்தையாகப் போற்றப்படுகிறார்.

“பிறரைக் கொல்லாமல் நாம் சாவது என்கிற போதனையை நாம் கற்றுக்கொண்டால், புராணங்களிலும் வரலாற்றிலும் கர்மபூமி என்று போற்றப்படும் இந்தியா, ஒரு ஈடன் தோட்டமாகிவிடும். அதாவது, மண்ணுலகில் சொர்க்க சாம்ராஜ்ஜியத்தின் பிரதிபிம்பமாக இந்தியா மாறிவிடும்” என்கிறார் காந்தி. அப்படிப்பட்ட காந்தி, ஒரு நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனாலும், இந்திய தேசத்தின் அடையாளமாகவும் முகமாகவும் அவர் விளங்குகிறார்.

இளம் வயதில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக தென்னாப்பிரிக்காவில் 21 ஆண்டுகள் வாழ்ந்த காந்தி, தாய் நாடு திரும்பிய பிறகு இந்தியா முழுவதும் பயணம் செய்தார். தமிழ்நாட்டில் பல ஊர்களுக்கு அவர் பயணம் சென்றிருக்கிறார். 1920-ம் ஆண்டு சென்னை வந்த காந்தி,  திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில் பேசினார். சென்னையிலிருந்து செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மாயவரம் வழியாக கும்பகோணம் சென்றார். ரயில் நிலையங்களில் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மகாத்மா காந்தி

நாகப்பட்டினம், நாகூர், திருச்சி ஆகிய நகரங்களில் காந்தி உரையாற்றினார்.  “நம்முடைய சகோதரர்களை நாம் தீண்டத்தகாதவர்களாகக் கருதினோம். அந்தப் பாவத்தின் சம்பளமாகத்தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கிறோம்” என்று தன் உரைகளில் அவர் குறிப்பிட்டார். ஈரோட்டுக்கு காந்தி பயணம் செய்தபோது, பெரியாரின் இல்லத்துக்குச் சென்றார். கதர் வியாபாரம், கள்ளுக்கடை மறியல் உட்பட பெரியாரும் நாகம்மையும் காந்தியடிகளுடன் இணைந்து பணியாற்றிய தருணங்களைப் பற்றி ‘யங் இந்தியா’வில் அவர் எழுதியிருக்கிறார்.

இந்தியா முழுவதும் ரயில் பயணத்தையே அவர் மேற்கொண்டார். ரயிலிலும் ரயில் நிலையங்களிலும் ‘இந்து டீ’, ‘முஸ்லிம் டீ’ என்று தனித்தனியாக தேநீர் விற்கப்பட்டது. அதற்கு ஆங்கிலேய அதிகாரிகள் அனுமதி அளித்திருந்தனர். அதைக் கண்டு கோபப்பட்ட காந்தி, “ரயில் பயணம், தீய பழக்கங்களை அதிகரிப்பதாக இருக்கக்கூடாது” என்று ‘ஹரிஜன்’ பத்திரிகையில் எழுதினார்.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் 1915-ம் ஆண்டு ஆசிரமம் ஒன்றை காந்தி நிறுவினார். பின்னர் விவசாயம், கால்நடை வளர்ப்பு, கதர் ஆடைகள் தயாரிப்பு போன்றவற்றில் நாட்டம்கொண்டிருந்த காந்தி, அதற்கு வசதியாக அகமதாபாத்தின் புறநகர்ப் பகுதிக்கு 1917-ம் ஆண்டு ஆசிரமத்தை மாற்றினார். சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்ததால், அது `சபர்மதி ஆசிரமம்’ என்றழைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் அதிக அளவில் வசித்ததால் ‘ஹரிஜன் ஆசிரமம்’ என்றும் அது அழைக்கப்பட்டது. 1917 முதல் 1930-ம் ஆண்டு வரை காந்தியும், அவரின் துணைவியார் கஸ்தூரி பாயும் சபர்மதி ஆசிரமத்தில் வசித்தனர்.

சபர்மதி ஆசிரமத்தில் காந்தி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் சபர்மதி ஆசிரமம் முக்கியப் பங்கு வகித்தது. எனவே, அது தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில், ரூ.1,200 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக சபர்மதி ஆசிரமத்தை மாற்றப்போகிறோம் என்று அறிவித்த பா.ஜ.க அரசு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதற்கு எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. காந்தியின் கொள்கையான ‘எளிமை’யை, பிரமாண்டம் என்ற பெயரில் அழித்துவிடாதீர்கள், அவரது ஆசிரமத்தை வர்த்தகமயமாக்குவது தவறானது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

குஜராத்தில் பிறந்து, தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றி, இந்தியா முழுவதும் பயணித்து சுதந்திர வேட்கையை இந்தியர்களிடம் ஏற்படுத்தி, காலனிய ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை மீட்பதற்குப் பாடுபட்ட காந்தியின் புகழ் உலகமெங்கிலும் பரவியிருக்கிறது.

காந்தி

“இந்த பூமியில் ரத்தமும் சதையுமாக இப்படி ஒருவர் வாழ்ந்தார் என்பதை எதிர்காலத் தலைமுறையினர் நம்பப் போவதில்லை” – என்று மகாத்மா காந்தி பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியது முற்றிலும் உண்மை. அன்பையும், அகிம்சையும், அமைதியையும் போதித்தது மட்டுமல்ல, அந்தக் கொள்கைகளில் உறுதியாகவும் இருந்தவர் காந்தி. அவருடன் பல கொள்கை மாறுபாடுகளைக் கொண்டிருந்தாலும்கூட, மதவெறி சக்திகளுக்கு எதிராகவும், தீண்டாமை உள்ளிட்ட சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் இயங்கிவரும் அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் காந்தியின் கொள்கைகளை இன்றைக்கும் உயர்த்திப்பிடிக்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.