பிரசாந்த் கிஷோரின் அடுத்த மாஸ்டர் பிளான்… கிழக்கில் இருந்து புறப்படும் அரசியல் சூறாவளி!

இந்தியாவில் பிரசாந்த் கிஷோர் என்ற பெயரை அறியாதவர்கள் இருக்க முடியாது. தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் வகுத்து கொடுத்து அவற்றை சரியான முறையில் செயல்படுத்திக் காட்டியவர். வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நாட்டின் முக்கிய மாநிலங்களில் எல்லாம் கால்தடம் பதித்து விட்டார். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைவதற்கு 2021 சட்டமன்ற தேர்தலின் போது பெரிதும் உறுதுணையாக இருந்தார்.

பிகார் மாநிலத்தை சேர்ந்த இவர், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து தேர்தல் வியூக நிபுணராக வேலையை தொடங்கியவர். தற்போது அந்த வேலையை விட்டு அரசியலில் ஈடுபடுவதற்காக நேரம் பார்த்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் காந்தி ஜெயந்தி நாளான இன்று தனது அடுத்தகட்ட திட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளார்.

ஜன் சூரஜ் அபியான் என்ற பெயரில் பிரம்மாண்ட பாத யாத்திரைக்கு தயாராகிவிட்டார். பிகார் மாநிலத்தின் தெருக்கள் தோறும் நடந்தே சென்று மக்களை சந்திக்கவுள்ளார். சுமார் 3,500 கிலோமீட்டர் தூரத்தை அடுத்த 12 முதல் 18 மாதங்களில் கடக்க முடிவு செய்துள்ளார். ஒருபக்கம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கி ஜம்மு காஷ்மீரில் நிறைவு செய்ய தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இதற்கு போட்டியாக தான் பிரசாந்த் கிஷோர் களமிறங்கி உள்ளாரா? இல்லை பிகார் மாநில அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளாரா? என பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர். இதற்கான பதிலை அவரே தெளிவாக சொல்லிவிட்டார். அதாவது, நாட்டிலேயே மிகவும் பின் தங்கியிருக்கும் பிகார் மாநிலத்தில் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் சரியான நபர்களை தேர்வு செய்து அவர்களை ஜனநாயக தூண்களாக மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். உள்ளூர் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த விரிவான திட்டம் ஒன்றை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு, விவசாயம்,

தொழிற்துறை, சமூக நீதி உள்ளிட்ட 10 துறைகளில் இருக்கும் வல்லுநர்களின் ஆலோசனைகளை சேகரித்து அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஒரு கனவுத் திட்டத்தை வடிவமைக்க இருக்கிறார். இதன்மூலம் பிகார் மாநிலத்தை ஒட்டுமொத்தமாக மாற்ற பிரசாந்த் கிஷோர் முடிவு செய்திருக்கிறார். இந்த பயணம் நிறைவடையும் போது புதிய அரசியல் கட்சி தொடங்குவதற்கும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் பிகார் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் பல்வேறு படிப்பினைகளை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.