பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு காண இடுக்கியை யூனியன்; பிரதேசமாக்க தேனி மாவட்ட கிராமசபை தீர்மானம்

போடி: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை யூனியன் பிரதேசமாக மாற்றக்கோரி போடியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்
பட்டது. தேனி மாவட்டம், போடி ஊராட்சி ஒன்றிய 15 கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இந்த கிராம சபை கூட்டங்கள் போடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலட்சுமி, ஞானத்திருப்பதி ஆகியோர் கலந்துகொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அணைக்கரைப்பட்டி கிராம ஊராட்சியில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் படி, இடுக்கி மாவட்டம் ஏற்கனவே தமிழ்நாட்டுடன் இணைந்து இருந்தது. மாநிலங்கள் பிரிக்கும் நேரத்தில் கேரளாவுடன் இருந்த நாகர்கோவிலை தமிழகத்திற்கு கொடுத்து இடுக்கி மாவட்டம் கேரளாவுடன் சேர்க்கப்பட்டது. தற்போது இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் பெரியாறு அணை அடிக்கடி உடையப் போகிறது என கேரளாவில் நாடகமாடி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்துகின்றனர்.

அதற்கு தீர்வு ஏற்படுத்தும் விதமாக இடுக்கி மாவட்டத்தை மீண்டும் தமிழகத்துடன் இணைக்கவேண்டும், இல்லையென்றால் இடுக்கி மாவட்டத்தை யூனியன் பிரதேசமாக மாற்றி அமைக்க வேண்டும் என ஒருமித்த கருத்தாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல, தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும், 5 மாவட்ட பாசன நிலங்களுக்கு தண்ணீர் தேவைக்காக ரூல் கர்வ் விதியை ரத்து செய்ய கோரியும் ஏகமனதாக  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.