மதுரை மேயரை சுதந்திரமாக செயல்பட நிதி அமைச்சர் அனுமதிக்க வேண்டும்: செல்லூர் ராஜூ வேண்டுகோள் 

மதுரை: ”மதுரை மாநகராட்சி மேயர் நிதி அமைச்சரிடம் இருந்து விடுதலை பெற்றால் மட்டுமே மக்கள் பணிகளை கவனிக்க முடியும்,’ என்று முனனாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றஞ்சாட்டினார்.

மதுரை பரவையில் இலவச மருத்துவ முகாமை இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”தீபாவளி வர உள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுபடுத்த தேவையான நடவடிக்கையை தமிழக அரசு தற்போதே தொடங்க வேண்டும். முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். விழாக் காலங்களில் அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசு அனைத்து தரப்பினருடன் பேசி நிர்ணயம் செய்ய வேண்டும். ஆம்னி பேருந்துகளின் தற்போதைய கட்டண உயர்வால் மக்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு அதிக சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும். தமிழக அமைச்சர்களுக்கு தற்போது வாய்கொழுப்பு அதிகமாகி விட்டது. அமைச்சர்கள், மக்கள் வரி பணத்தில் தான் சலுகைகளை அனுபவிக்கின்றனர். ஆனால், அமைச்சர்கள் மக்களை ஓசியில் அனைத்தும் பெறுவதாக நகையாடுகின்றனர்.

அதற்குதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இலவசம் என கூறாமல், விலையில்லா மடிகணினி, விலையில்லா சைக்கிள் என பெயரிட்டு அழைத்தார். எனவே, மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என்று உள்ளதை, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துகள் என மாற்றம் செய்ய வேண்டும்.

மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அதிமுக ஆட்சியில் யானை பாகன் போல் செயல் பட்டார். ஆனால் தற்போது, அவரை குதிரை ஓட்டியாக பயன்படுத்துகின்றனர். நல்ல ஐஏஎஸ் அதிகாரிகளை, நல்ல வகையில் பயன்படுத்த வேண்டும். தற்போது ரேசன் அரிசி கடத்தல் அதிகமாகி உள்ளது. இந்த விசயத்தில் செயலாளர் ராதாகிருஷ்ணன் கைகள் கட்டப்பட்டு உள்ளது.

மதுரை மாநாகராட்சி மேயரை முதலில் சுதந்திரமாக செயல்பட நிதி அமைச்சர் அவரை அனுமதிக்க வேண்டும். அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், சொல்வதை தான் செய்ய வேண்டும் என செயல்படுகிறார். மதுரை மாநகராட்சி மேயர் நிதி அமைச்சரிடம் இருந்து விடுதலை பெற்றால் மட்டுமே மக்கள் பணிகளை கவனிக்க முடியும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.