சென்னை: பூட்டிய வீட்டுக்குள் தம்பதி கொலை – மகளின் ஆண்நண்பரால் நேர்ந்த கொடூரம்

சென்னை குரோம்பேட்டையை அடுத்த ஜமீன் ராயபேட்டை, பிள்ளையார் கோயில் 1-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(59). இவரின் மனைவி மஞ்சுளா(50). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மூத்த மகள் வசந்தி, கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் வசந்திக்கும் அண்ணாநகரைச் சேர்ந்த மோசஸிக்கும் இன்ஸ்ட்ராகிராம் மூலம் நட்பு ஏற்பட்டது. அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக வசித்து வந்தனர் எனக் கூறப்படுகிறது.

மஞ்சுளா

போதைக்கு அடிமையான மோசஸிக்கும் வசந்திக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் மோசஸைப் பிரிந்த வசந்தி, மீண்டும் தாய்வீட்டுக்கு வந்துவிட்டார். அதனால் மோசஸ், வசந்தியின் வீட்டுக்கு வந்து அவரை சமாதானப்படுத்தி குரோம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு சில தினங்களுக்கு முன்பு குடியேறினார். அப்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதைப் போல மோசஸ், வழக்கம் போல வசந்தியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுதவிர வசந்தியின் மகளிடம் மோசஸ் அநாகரீகமாக நடந்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த வசந்தி, தன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு சகோதரியின் வீட்டுக்குச் சென்றுவிட்டார்

இதையடுத்து வசந்தியை போனில் தொடர்பு கொண்ட மோசஸ், உன்னைப் பிரிந்து என்னால் தனியாக வாழ முடியாது என்று கூறியுள்ளார். அதற்கு வசந்தி, உன்னுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த மோசஸ், `நீ என்னோடு குடும்பம் நடத்த வரவில்லை என்றால் உன்னுடைய அம்மாவையும் அப்பாவையும் கொலை செய்து விடுவேன்’ என மிரட்டியுள்ளார். ஆனால் அதை கண்டுக்கொள்ளாத வசந்தி, தன்னுடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். வசந்தி எங்கிருக்கிறார் என்று தெரியாத மோசஸ், அவரின் அம்மா மஞ்சுளா. அப்பா ஆறுமுகம் ஆகியோரிடம் விவரத்தைக் கூறியுள்ளார். அதற்கு வசந்தியின் அம்மாவும் அப்பாவும், உன்னை நம்பி என்னுடைய மகளை அனுப்ப முடியாது என்று தெரிவித்துள்ளனர். இது மோசஸிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆறுமுகம்

வசந்தியைப் பிரிந்த மனவேதனையிலிருந்த மோசஸ், அவரைப் பழிவாங்க திட்டமிட்டார். அதற்காக வசந்தியின் அம்மா மஞ்சளா, அப்பா ஆறுமுகத்திடம் சமாதானமாக பேசிய மோசஸ் இருவரையும் வாடகைக்கு குடியிருந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து வசந்தி, எங்கு இருக்கிறாள் என்று கேட்டு இருவரையும் மோசஸ் கொடுமைப்படுத்தியுள்ளார். அதற்கு அவர்கள், வசந்தி குறித்து எந்தத்தகவலும் தங்களுக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த மோசஸ், இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு வீட்டை வெளிபக்கமாக பூட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

மஞ்சுளா, ஆறுமுகத்தை போனில் வசந்தி தொடர்பு கொண்ட போது இவரின் போன் நம்பர்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அதனால் சந்தேகமடைந்த வசந்தி, தன்னுடைய சகோதரரிடம் விவரத்தைக் கூறி அம்மா, அப்பாவை பார்க்கும்படி தெரிவித்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்து பார்த்தபோது வெளிபக்கமாக பூட்டு போட்டிருப்பது தெரியவந்தது. மேலும் வீட்டுக்குள் இருந்து தூர்நாற்றம் வீசுவதும் தெரிந்தது. உடனடியாக சிட்லபாக்கம் காவல் நிலையத்துக்கு வசந்தியின் சகோதரர் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மஞ்சுளாவும் ஆறுமுகமும் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தனர்.

கொலை

இதையடுத்து இருவரின் சடலங்களையும் மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் மோசஸ்தான் இருவரையும் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. அதனால் மோசஸை போலீஸார் தேடிவருகின்றனர்.

இதகுறித்து போலீஸார் கூறுகையில், “இந்த இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் மோசஸ் என்பவரைத் தேடிவருகிறோம். மேலும் இந்த வழக்கில் மோசஸ் சிக்கினால்தான் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கும் எனத் தெரியவரும். தேடப்படும் மோசஸ் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.