செயலிழந்த மங்கள்யான் செயற்கைக்கோள்: என்ன காரணம்?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-25 ராக்கெட் மூலம், சுமார் ரூ.450 கோடி செலவில் விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் வின்கலம் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், ‘மங்கள்யான்’ செயற்கைகோள் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் ஆய்வு மேற்கொண்டு வந்த ‘மங்கள்யான்’ செயற்கைக்கோளில் எரிபொருள் மற்றும் பேட்டரி தீர்ந்ததை அடுத்து, அது தன் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதனுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக, இஸ்ரோ தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

மங்கள்யான் விண்கலத்தில் 15 கிலோ எடை கொண்ட 5 அறிவியல் ஆய்வு கருவிகள் பொருத்தி அனுப்பப்பட்டன. அவை அனைத்துமே தொடர்ந்து தகவல்களை அனுப்பி வந்ததாக மங்கள்யான் ஏழு ஆண்டுகள் நிறைவையொட்டி கடந்த ஆண்டு இஸ்ரோ தகவல் தெரிவித்திருந்தது. விண்கலத்தின் ஆய்வுக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அப்போது அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த எட்டு ஆண்டுகளாக செவ்வாய் கிரகம் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல பயனுள்ள தகவல்களை அளித்து வந்த மங்கள்யான் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

மங்கள்யான் 6 மாதங்கள் வரை செயல்படும் வகையில் மட்டுமே வடிவமைக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பட்டது. ஆனால், 8 ஆண்டுகள் வரை அது செயல்பாட்டில் இருந்துள்ளது. வழக்கமாக தொலைத்தொடர்பு மற்றும் கண்காணிப்பு செயற்கைக் கோள்கள்தான் 7 முதல் 9 ஆண்டுகள் வரை செயல்படும். ஆனால், ஒரு விண்கலத்தையும் 8 ஆண்டுகள் இயங்க வைக்க முடியும் என்பதை மங்கள்யான் நிரூபணம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.