“நித்தியானந்தா என நினைத்து எனது ஆசிரமத்தை இடித்துவிட்டனர்!" – பல்லடம் சாமியார் போலீஸில் புகார்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை மாலை, காரில் வந்தவரைப் பார்த்து போலீஸ் மட்டுமின்றி அங்கிருந்த பொதுமக்களுக்கும் வியப்பு கலந்த ஆச்சர்யம் ஏற்பட்டது. காரணம் வந்தவரின் நடை, உடை, பாவனை அச்சு அசலாக நித்தியானந்தாவைப் போல் இருந்ததுதான்

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரானந்தா. இவர் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆன்மிகப் பணி மேற்கொண்டு வருகிறார்.

காவல் நிலையம்

பல்லடத்தில் தனது ஆன்மிகப் பணியை விரிவுபடுத்த ஏதுவாக காரணம்பேட்டை அருகே செல்வகுமார் என்பவருக்குச் சொந்தமான இடத்த 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.

அந்த இடத்தில் கட்டப்பட்டு வரும் ஆசிரமத்திலிருந்து 25 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதாக பல்லடம் குற்றப் பிரிவில் பாஸ்கரானந்தா கடந்த வாரம் புகார் அளித்தார்.

பாஸ்கரானந்தா

இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் தனது ஆசிரமத்தை இடித்துவிட்டதாகவும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்குமாறு பல்லடம் காவல் நிலையத்தில் தன் சிஷ்யர்களுடன் வந்து திங்கள்கிழமை மாலை புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பாஸ்கரானந்தா கூறுகையில், “செல்வகுமார் என்பவரிடம் கடந்த 2018-ல் ஒப்பந்தம் மேற்கொண்டு சுமார் ரூ.1.50 கோடி முன் பணமாக கொடுத்து ஆசிரமத்தின் கட்டுமானப் பணியைத் தொடங்கினேன். கொரானா பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுமானப் பணியை மீண்டும் தொடங்கி, தற்போது முடியும் நிலையில் உள்ளது.

பாஸ்கரானந்தா

இந்நிலையில், எந்த முன் அறிவிப்பும் இன்றி நிலத்தின்மீது வங்கியில் கடன் பெற்றிருப்பதாக ஆசிரமத்தின்மீது அறிவிப்பை ஒட்டி, இரவோடு இரவாக பொக்லைன் இயந்திரம் மூலம் மர்ம நபர்கள் ஆசிரமத்தை இடித்து உள்ளனர்.

இதோடு கருவறையில் வைக்கப்பட்டிருந்த வைர நகைகளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். நான் பார்ப்பதற்கு நித்தியானந்தா போல் இருப்பதால் என் ஆசிரமத்தின்மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம்.

பாஸ்கரானந்தா

எனது ஆசிரமத்தை இடித்தவர்கள்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தற்கொலை செய்துகொள்வேன்” என்றார்.

இது தொடர்பாக போலீஸில் விசாரித்தபோது, “அவர் வங்கியில் பெற்ற கடனுக்காக கடந்த ஆகஸ்ட் மாதமே நிலத்தை வங்கி நிர்வாகம் கையகப்படுத்திவிட்டது. அவரின் அனைத்து பொருள்களும் ஒரு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது புகார் குறித்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.