குப்பைக் கொட்டினால் அபராதம்; வீடியோ எடுத்தால் ரூ.200 சன்மானம்!

வேலூர் மாநகராட்சியில் நடக்கும் கேலி கூத்தான பலச் சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்படுவதும் தொடர்க்கதையாகிவிட்டன. ஏற்கெனவே, தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரை அப்புறப்படுத்தாமல், சிமென்ட் கலவையைக் கொட்டி டூவீலரின் டயர்களைப் புதைத்தனர். அடுத்ததாக, ஜீப்பை அகற்றாமல் ஏடாகூடமாக தார்ச்சாலைப் போட்டனர். இந்த சர்ச்சைகள் அடங்குவதற்குள்ளாகவே, அடிக்குழாய் அகற்றப்படாமல் அப்படியே கழிவுநீர் கால்வாய் கட்டினர்.

இந்த நிலையில், சமீப நாள்களாக எதுவுமே நடக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்த நெட்டிசன்களை உற்சாகப்படுத்துவதற்காக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் வேலூர் மேயர் சுஜாதா. ‘குப்பையைக் கொட்டினால் அபராதம்; அதனை வீடியோவாக எடுத்தால் சன்மானம்’ என்பது தான் அவரின் எக்ஸ்க்ளூசிவ் ஆக்‌ஷன். மேயரின், இந்த நடவடிக்கையை விரிவாக அலசிப் பார்க்கலாம்.

மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் இருக்கின்றன. இவற்றில் எந்தவொரு பொது இடத்திலும் குப்பைக் கொட்டக் கூடாது. அப்படியே யாராவது கொட்டினால் அவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குப்பைக் கொட்டுபவரை எப்படி கண்டுபிடிப்பார்கள் என்றால், யாராவது வீடியோ எடுத்து தர வேண்டும். வீடியோ எடுத்து கொடுப்பவருக்கு, அபராதத் தொகையிலிருந்து 200 ரூபாய் எடுத்து சன்மானமாகக் கொடுக்கப்படும்.

அதுமட்டுமின்றி, குப்பைகளை தரம் பிரித்து வழங்கவில்லையென்றால் வீடுகளுக்கு ரூ.100 அபராதம், வணிக நிறுவனங்களுக்கு ரூ.500 அபராதம், வணிக வளாகங்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். மேலும், கழிவுநீர்க் கால்வாய்கள், காலி மனைகளில் குப்பைக் கொட்டினாலும் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். வாசலில் குப்பைகளை எரிப்பதும் குற்றம். மீறி எரித்தால் வீட்டுக்கு ரூ.100 அபராதம், வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 அபராதம். வீட்டுக்குள்ளேயே குப்பைகளைச் சேகரித்து வைத்துக்கொண்டு வெளியே கொண்டுவந்து தூய்மைப் பணியாளர்களிடம் கொடுக்காமலிருந்தாலும் 20 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்கிறது மேயரின் அறிவிப்பு.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சில கேள்விகளையும் எழுப்புகிறார்கள் மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர். ‘‘செல்போனில் வீடியோ எடுக்கும் நபரை குப்பைக் கொட்டுபவர் தாக்கிவிட்டால், மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்குமா? கட்டிப்புரண்டு சண்டைப் போடுவதும், போடாமலிருப்பதும் இருவருக்கும் இடையேயானது என்று வேடிக்கை மட்டுமே பார்க்கும். இது ஒரு வேலை என்று மற்ற வேலைகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு, வீடியோ எடுத்து அதனை மாநகராட்சி அலுவலகத்துக்கோ, மண்டல அலுவலகத்துக்கோ சென்று கொடுக்க வேண்டுமா? குப்பைக் கொட்டியவரிடம் அபராதம் வசூலிக்கும்போது, அவர் கொடுக்க மறுத்து நீதிமன்றத்தை அணுகிவிட்டால் என்ன செய்வது? வீடியோ எடுத்த நபரும் சாட்சியாக மாற வேண்டுமா?

வேலூர் மேயர் சுஜாதா

பகலில் குப்பைக் கொட்டினால்தான் வீடியோ எடுக்க முடியும். இரவிலோ, இருள் அகலும் முன்பு அதிகாலை நேரத்திலோ குப்பையைப் போட்டுவிட்டுப் போனால், எப்படி கண்டுபிடிக்க முடியும்? மாநகராட்சிப் பணியாளர்களே கேட்க முடியாத சூழலில், பொது மக்களுக்குள்ளாகவே மோதலை ஏற்படுத்தும் சூழல் சரியானது அல்ல. முதிர்ச்சியற்ற நடவடிக்கை இது’’ என்கிறனர்.

இதெல்லாம் சாத்தியம் தானா, விமர்சனத்துக்குள்ளாகாதா, வேலூர் மக்களிடம் எடுபடுமா? என்ற கேள்விகளை மேயர் சுஜாதாவிடமே கேட்டோம். ‘‘இது சாத்தியம் தான். யார் வீடியோ எடுத்துக்கொடுத்தாலும் கண்டிப்பாக 200 ரூபாய் கொடுப்போம். சம்பந்தப்பட்டவர்களிடமும் 500 ரூபாய் அபராதம் வசூலிப்போம். இந்த வீடியோ கான்செப்ட்டே என்னுடைய ஐடியா தான். ஒரு சில குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகளை கொண்டு வந்து தூய்மைப் பணியாளர்களிடம் கொடுப்பதற்கே சோம்பேறித் தனப்படுகிறார்கள். அபராதம் கட்டவில்லையென்றால், குழாய் இணைப்பைத் துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். குப்பைத் தொட்டியில்லாத மாநகரமாக வேலூரை மாற்றியிருக்கிறோம். தமிழகத்திலேயே வேற எந்த மாநகராட்சியிலும் இந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நான் தான் முதல் ஆள்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.