அரசு மருத்துவமனையின் மேற்கூரையில் அழுகிய நிலையில் 200-க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுப்பு..!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் பகுதிலுள்ள நிஷ்தர் மருத்துவமனையின் மேற்கூரையில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மனித உடல் உறுப்புகளும் மீட்கப்பட்டன. இந்த மாகாண முதல்வரின் ஆலோசகராக பொறுப்பு வகிக்கும் சவுத்ரி ஜமான் குஜ்ஜார், கடந்த 13-ம் தேதி நிஷ்தர் மருத்துவமனைக்கு சென்றபோது அவரிடம் ஒரு நபர் இது தொடர்பான விவரத்தைக் கூறினார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சவுத்ரி ஜமான் குஜ்ஜார் நிஷ்தார் மருத்துவமனையின் பிணவறையின் கதவை திறக்க உத்தரவிட்டு உள்ளே சென்று ஆய்வு செய்தார். அப்போது பிணவறையின் கூரையில் 200 அழுகிய உடல்கள் வீசப்பட்டிருந்தன.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “பிணவறை அதிகாரிகளிடம், ‘இந்த உடல்களை விற்கிறீர்களா? என்று கேட்டேன். அதன்பின், மருத்துவர்களிடம் சென்று, ‘என்ன நடக்கிறது என்பதை விளக்குமாறு அவர்களிடம் கேட்டேன்’. மருத்துவர்கள், இவை மருத்துவ மாணவர்களால் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டன என்று கூறினர். அங்கு இருந்த பெண்களின் உடல்கள் கூட மறைக்கப்படவில்லை. அததனை சடலங்களும் நிர்வாண கோலத்தில் வீசப்பட்டிருந்தன. மருத்துவக் கல்விக்காகப் பயன்படுத்தப்பட்ட அனைத்து உடல்களும் முறையாக அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். எனது 50 வருட வாழ்க்கையில் இதுபோன்ற எதையும் நான் பார்த்ததில்லை” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து நிஷ்தர் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர். மரியம் அஷ்ரப் கூறுகையில், “இந்த உடல்கள் மாணவர்களால் மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்தப்படுகின்றன. இது அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட விதிகளின்படி செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.

பஞ்சாப் மாகாண முதல்வர் பர்வேஸ் இலாஹி இந்த விவகாரத்தை விசாரிக்க உயர் அதிகாரம் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார். சிறப்பு சுகாதார செயலாளர் முஸாமில் பஷீர் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு விசாரணையை முடிக்க மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கண்டெடுக்கப்பட்டுள்ள உடல்களை உடனடியாக உரிய முறைப்படி தகனம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இந்த மனித உடல்கள் அனைத்தும் கழுகுகளுக்கு தீவனமாக பயன்படுத்த கூரையில் வைக்கப்பட்டன என்று சிலர் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.