உலகப் பசி குறியீட்டு மதிப்பீடு; 101-வது இடத்திலிருந்து 107-வது இடத்துக்கு சரிந்தது இந்தியா!

இந்தியா உலகப் பசி குறியீடு (Global Hunger Index) 2022-ல் உலகளவில் 121 நாடுகளில் 107-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 101-வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 107-வது இடத்திற்குச் சரிந்து தன்னுடைய அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தைவிடப் பின்தங்கியுள்ளது.

சீனா, துருக்கி, குவைத் உட்பட 17 நாடுகள் ஐந்திற்கும் கீழான GHI மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தைப் பகிர்ந்திருப்பதாகப் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கண்காணிக்கும் உலகப் பசி குறியீட்டின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி காங்கிரஸ் எம்.பி பா.சிதம்பரம், “2014-ம் ஆண்டிலிருந்து 8 ஆண்டுகள் நடந்த மோடி தலைமையிலான அரசில் நமது நிலை மோசமடைந்துவிட்டது. எப்போது நம்முடைய மதிப்பிற்குரிய பிரதமர் ஊட்டச்சத்துக் குறைபாடு, பசி மற்றும் குழந்தைகளிடையே காணப்படும் வளர்ச்சிக் குறைபாடு உள்ளிட்ட உண்மையான பிரச்னைகள் குறித்துப் பேசப்போகிறார்?” என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐரிஷ் உதவி நிறுவனமான கன்சர்ன் வேர்ல்டு வைட் மற்றும் ஜெர்மன் அமைப்பான வெல்ட் ஹங்கர் ஹில்ஃப் (WHH) ஆகியவை இணைந்து தயாரித்த அறிக்கையில் இந்தியாவில் பசியின் அளவை `அபாயகரமானது’ என்று குறிப்பிட்டிருக்கின்றன.

2021-ல், மொத்தம் 116 நாடுகளில் இந்தியா 101-வது இடத்தை பிடித்திருந்தது. தற்போது 121 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இந்தியா 107-வது இடத்திற்குச் சரிந்துள்ளது. இந்தியாவின் GHI புள்ளிகளும் 2014 மற்றும் 2022 ஆண்டுகளுக்கிடையில் 28.3 -29.1 என்கிற வரம்பிற்குள் குறைந்துள்ளன.

பசி

கடந்த ஆண்டு இந்தியா பட்டியலில் 100-வது இடத்திற்கு மேல் சென்றபோது மத்திய அரசு இந்த அறிக்கையினை, “கள எதார்த்தம் இல்லாதது. அதிர்ச்சி அளிக்கக்கூடிய அறிக்கை” எனக் கூறி மறுத்துவிட்டது. மேலும் அரசு உலகப் பசி குறியீட்டைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் ஆராய்ச்சி முறை அறிவியல் பூர்வமற்றது என்று கூறியிருந்தது.

“உலகப் பசி குறியீடு 2021, ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள மக்கள்தொகை விகிதத்தில் FAO (ஐ.நா-வின் உணவு மற்றும் வேளாண்துறை அமைப்பு) மதிப்பீட்டின் அடிப்படையில் இந்தியாவைத் தரவரிசையில் குறைத்துள்ளதைக் காணும்போது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் இது கள எதார்த்தமற்றதாகவும் மற்றும் தீவிர முறைசார் சிக்கல்களாலும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகப் பசி குறியீடு GHI, கன்சர்ன் வேர்ல்டு வைட் மற்றும் வெஸ்ட் ஹங்கர் ஹெல்ப் WHH ஆகியவை தங்களுடைய அறிக்கையை வெளியிடுவதற்கு முன் தகுந்த கவனம் செலுத்தவில்லை” என்று மத்திய அரசு தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருந்தது.

மேலும், “FAO பயன்படுத்திய ஆராய்ச்சி முறை என்பது அறிவியல் பூர்வமற்றது. அவர்கள் கேலப் (Gallap) தொலைபேசியின் வாயிலாக ‘நான்கு கேள்விகளின்’ மூலம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகளின் அடிப்படையிலேயே தங்களுடைய மதிப்பீட்டைக் கொண்டுள்ளனர். ஊட்டச்சத்துக் குறைபாட்டை அளப்பதில் ‘குறிப்பிட்ட காலத்தில் தனி நபருக்குக் கிடைக்கக்கூடிய உணவு தானியங்கள்’ என்பது போன்ற எந்த அறிவியல்பூர்வ ஆராய்ச்சி முறைகளுமே பயன்படுத்தப்படவில்லை. அறிவியல்பூர்வமாக ஊட்டச்சத்துக் குறைபாட்டை அளப்பதற்கு எடை மற்றும் உயரம் போன்றவற்றின் அளவுகள் தேவை. ஆனால் இங்குப் பயன்படுத்தப்பட்டுள்ள ஆராய்ச்சி முறையோ முழுக்க முழுக்க மக்களிடம் நடத்தப்பட்ட கேலப்பின் தொலைபேசி வாயிலான கருத்துக்கணிப்பின் அடிப்படையிலேயே மதிப்பிடப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், “கேலப் முறையில் நடத்திய கருத்துக்கணிப்பின் அடிப்படையில்தான் இந்தியா தரவரிசையில் வீழ்ச்சி அடைந்துள்ளது” என்கிற மத்திய அரசின் கூற்றை WHH மறுத்துள்ளது. “கேலப் கருத்துக்கணிப்பு GHI-ல் பயன்படுத்தப்படவில்லை. மாற்றாக ஐநா-விற்கு இந்தியா வழங்கிய அதிகாரபூர்வ தரவுகளைப் பயன்படுத்தியே அளவிடப்படுகிறது” என்று WHH தெரிவித்தது.

“GHI ‘ஊட்டச்சத்துக் குறைபாடுகளின் பரவல்’ குறிகாட்டியையே பயன்படுத்துகிறது… அதாவது இந்தியா போன்ற உறுப்பு நாடுகளிடமிருந்து பெறப்பட்டு, கவனமாகத் தொகுக்கப்பட்ட உணவு இருப்பு நிலை குறிப்புகளின் மூலமே இந்த மதிப்பீடு செய்யப்படுகிறது” என்று மிரியம் வெய்மர்ஸ், GHI-ன் ஆலோசகர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்தாண்டு அறிக்கை தொடர்பான வாத, பிரிதிவாதங்கள் தற்போது தொடங்கியிருக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.