அத்தியாவசியமான மருந்துகளை இனங்கண்டு கொள்வதற்கு உயர்மட்ட தொழில்நுட்பக் குழு

இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகளில் பெருந்தொகையானவை மக்களின் பாவனைக்கு அத்தியாவசியமற்றவை என்றும், ஒரு மருந்துக்குப் பல வர்த்தக நாமங்களில் மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதால் முறையான கட்டுப்பாடுகள் இல்லாமை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது.

எனவே, இந்நாட்டு மக்களின் மருந்துத் தேவை மற்றும் இதனைப் பூர்த்தி செய்வதற்கு அத்தியாவசியமான மருந்துப் பொருட்கள் யாவை என்பதை அடையாளம் காண்பதற்கு கொவிட் 19 தெற்றுநோய் காலத்தில் அமைக்கப்பட்டது போன்று உயர்மட்ட தொழில்நுட்பக் குழுவொன்றை அமைப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இந்நாட்டின் மருந்துப் பாவனை தொடர்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக ரணவக்க தலைமையில் (14) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், இந்நாட்டுக்கு மருந்துகளை இறக்குமதி செய்வது மற்றும் விநியோகம் செய்வது தொடர்பான கொள்முதல் நடைமுறைகளுக்கு அதிக காலம் செலவாகின்றமை மற்றும் முறையான ஒருங்கிணைப்பு இல்லாமை குறித்தும் இங்கு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தக் கொள்முதல் நடைமுறையினை ஒழுங்குபடுத்துவது மற்றும் உரிய ஒருங்கிணைப்பை மேற்கொள்வது தொடர்பில் நிபுணர்கள் பரிந்துரைகளை முன்வைத்தனர்.

நோய்களைத் தடுப்பதற்கு சுதேச மருத்துவத்தில் நிரூபிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இதற்கு மேலதிகமாக இலங்கையில் அதிகமான மருந்துகள் பயன்படுத்தப்படும் இருதய நோய், நீரிழிவு, உயர் குருதி அமுக்கம் மற்றும் கொலஸ்ட்ரோல் போன்ற நோய்களைக் குறைப்பதற்கு பயன்படுத்தக் கூடிய உணவுகள் மற்றும் மாற்று சுதேச மருந்துகளை ஊக்கப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

சுதேச மருத்துத் தயாரிப்பில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் உப குழு கவனம் செலுத்தியது.
தேசிய ஔடதக் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் அசித்த.த சில்வா, தேசிய ஔடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் உறுப்பினரும் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையின் வைத்தியகலாநிதி ஆனந்த விஜேவிக்ரம மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரியதர்ஷினி கலப்பதி ஆகியோர் குழு முன்னிலையில் தமது நிபுணத்துவ கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

அத்துடன், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவரும், தேசிய ஔடதக் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தலைவருமான பேராசிரியர் எஸ்.டி.ஜயரத்ன, ஆயுர்வேத ஆணையாளர் எம்.டி.ஜே.அபேகுணவர்த்தன, ஆயுர்வேத வைத்தியம் தொடர்பான பேராசிரியர் கமல் பெரேரா, அரசாங்க ஆயுர்வேத திணைக்களம் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் பலரும் தமது கருத்துக்களை குழு முன்னிலையில் தெரிவித்தனர்.

இன்றைய கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ சிசிர ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் கௌரவ வஜிர அபேவர்தன, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி.கே ஜயதிலக ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.