'இடம் பொருள் ஏவல்' : விரைவில் வருகிறது…

சீனு ராமசாமி இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைப்பில், விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி கடந்த சில வருடங்களாக வெளிவராமல் இருக்கும் படம் 'இடம் பொருள் ஏவல்'.

2015ம் ஆண்டே இந்தப் படம் வெளிவந்திருக்க வேண்டும். படத்தைத் தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சில நிதி சிக்கல்களில் சிக்கியதால் இப்படத்தின் வெளியீடு தள்ளிக் கொண்டே வந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு கொரோனா தாக்கம் வந்த போது இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற ஒரு பேச்சும் வந்தது.

ஆனால், இப்போது படத்தைத் தியேட்டர்களில் வெளியிடுவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக இந்தப் படம் பற்றிய அப்டேட்களை படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி கொடுத்து வருகிறார். 'இடம் பொருள் ஏவல்' படத்தின் தயாரிப்பாளரைச் சந்தித்த புகைப்படத்தை இரு தினங்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார். அடுத்து நேற்று 'இடம் பொருள் ஏவல்' படத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து படம் வருகிறது என்ற தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'மாமனிதன்' படம் தியேட்டர்களை விடவும் ஓடிடி தளங்களில் அதிக வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தின் வரவேற்புதான் 'இடம் பொருள் ஏவல்' படம் வெளிவருவதற்கான முன்னெடுப்பிற்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். நவம்பர் மாதத்தில் இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.