தொழில்முனைவர்களுக்குக் காணப்படும் தடைகளை நீக்குவதற்கு புதிய கொள்கைக் கட்டமைப்பு

இந்நாட்டில் உள்ள தொழில்முனைவர்களுக்குத் தற்பொழுது காணப்படும் தடைகளை நீக்கி புதிய கொள்கைக் கட்டமைப்பை உருவாக்க சம்பந்தப்பட்ட சகல நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்யமாறு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ நேற்றையதினம் (19), மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுலவுக்குப் பணிப்புரை வழங்கினார்.

  • பாடசாலை கல்வியிலிருந்தே தொழில்முனைவு மனப்பான்மையை வளர்ப்பதற்கு கல்விக் கொள்கையைத் தயாரிக்கப் பரிந்துரை
  • நாட்டில் சரியான கல்வி, தொழில் அல்லது எந்தவொரு பயிற்சியும் அற்ற தொழில் நோக்கமற்ற 8 இலட்சம் இளைஞர்கள் இருப்பதாகவும் புலப்பட்டது
  • மின்சக்தி, வலுசக்தித் துறையில் புதிய கொள்கைகளைத் தயாரிப்பதற்கான அடிப்படை விடயங்கள் கலந்துரையாடப்பட்டது

தொழில்முனைவர்கள் இந்நாட்டில் தொழில்முயற்சிகளை ஆரம்பிப்பது மிகவும் சிக்கலான செயற்பாடாக மாறியிருப்பதுடன், அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போன்று இச்செயற்பாடுகளை இலகுவாக்கும் வகையில் கொள்கைத் திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் உபகுழு சுட்டிக்காட்டியது. பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகங்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை ஒருங்கிணைத்து இந்த செயற்பாட்டை இலகுவான முறையாகக் கொண்டு வருவதற்கு சட்டரீதியான மற்றும் கொள்கை ரீதியான மாற்றங்களை குழுவின் அடுத்த கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானிப்பதற்கும் உபகுழு இணங்கியது.

தொழில்முனைவு மற்றும் முதலீடுகளைப் பலப்படுத்துவதற்கான தேசிய கொள்கைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவின் முன்னிலையில் நேற்று (19) அழைக்கப்பட்டபோதே இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டது.

தொழில்முனைவு உள்ளிட்ட தொழில் வழிகாட்டல் இந்நாட்டு பாடசாலை மாணவர்களின் பாடநெறியில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும், இதனையும் உள்ளடக்கும் வகையில் கல்விக் கொள்கையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல சுட்டிக்காட்டினார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிற்கு அமைய இந்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு அல்லது உரிய பயிற்சி இன்றிக் காணப்படும் இளைஞர்களின் தொகை ( Not in Employment, Education, Training / NEET ) ஏறத்தாழ 8 இலட்சம் என்றும், தொழில்ரீதியான நோக்கங்கள் இன்றி உள்ள அவர்களுக்குத் தொழில்வாய்ப்புக்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இலங்கையின் கல்விப் பாடத்திட்டத்தில் வெற்றிகரமான தொழில்முனைவோரின் வாழ்க்கை வரலாறுகள் இடம்பெற வேண்டும் என்றும், பாரம்பரிய வேலைகள் மற்றும் தொழில் முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட புதிய தொழில் வாய்ப்புகள் குறித்துப் பாடசாலை முதலே சிறுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற விடயமும் இங்கு கலந்துரையாடப்பட்டது. எனவே, தரம் 9 இலிருந்து பொருத்தமான தொழில் துறையைத் தேர்ந்தெடுப்பதற்கான சரியான வழிகாட்டுதலுக்காக கல்விக் கொள்கைகள் தயாரிக்கப்பட வேண்டும் அல்லது ஒருவரின் திறன் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் கல்வி அமைச்சு சம்பந்தப்பட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்து அதற்கான கொள்கைகளைத் தயாரிக்க வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது.

இக்கூட்டத்தில் அமைச்சர் நசீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாந்து, சாகர காரியவசம், வஜிர அபபேவர்தன, அலிசப்ரி ரஹீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, மின்சக்தி மற்றும் எரிசக்திவலுத் துறை தொடர்பான புதிய கொள்கைகளை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடலும் நேற்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்  கஞ்சன விஜேசேகர, இராஜங்க அமைச்சர் டி.வி.சானக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, சாகர காரியவசம் மற்றும் மின்சக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரன ஆகியோர் கலந்துகொண்டனர்.

மின்சாரம் மற்றும் எரிசக்தி துறையில் தொடர்புடைய நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்கை மாற்றங்கள், கொள்முதல் செயல்முறையை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட அடிப்படை விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.