குழப்பங்கள் ஏதும் இல்லாமல் தேர்வை நடத்த வேண்டும்: நீதிமன்றம் அறிவுறுத்தல்!

மாணவர் சேர்க்கைக்கு மூன்று வெவ்வேறு தேதிகளில், வெவ்வேறு வினாதாள்களுடன் நுழைவு தேர்வு நடத்தியது சட்டத்திற்கு விரோதமானது என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், எதிர்காலத்தில் இதுபோன்று குழப்பங்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை கணிதவியல் கழகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை கணிதவியல் கழகத்தில் 116 இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு கடந்த மே 22ம் தேதி நடைபெறும் என அறிவிக்கபட்டது. ஆனால் வேறு தேர்வுகள் குறுக்கிட்டதன் காரணமாக மே23 மற்றும் ஜூன் 17 தேதிகளில் 3 வெவ்வேறு வினாதாளுடன் தேர்வு நடத்தபட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 22ஆம் தேதி தேர்வு எழுதியவர்களில் 45 பேரும், 23 தேதி தேர்வு எழுதியர்களில் 45 பேரும், ஜூன் 17ஆம் தேதி தேர்வு எழுதியவர்களில் ஒருவர் தேர்வு செய்யபட்டனர்.

மூன்று முறைகள் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு வினாதாள்கள் மூலமாக தேர்வு நடத்தியதால் தனக்கு இடம் கிடைக்க வில்லை என மதுமிதா என்ற மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், ஒரு படிப்பிற்கான நுழைவு தேர்வு என்பது ஒரு வினாத்தாள் மூலம், ஒரு முறை தான் நடத்தபட வேண்டும். வேறு தேர்வுகள் குறுக்கிடுவதாக இருந்தால், இந்த தேர்வை வேறு தேதிக்கு மாற்றி இருக்க வேண்டும், அவ்வாறு செய்யாமல் ஒரு படிப்பிற்கு 3 வினாதாள்களுடன் 3 தேர்வு நடத்தியது சட்ட விதோதமானது என தெரிவித்தார்.

இந்த தேர்வு நடைமுறையை ரத்து செய்யபட வேண்டியது தான் என்றாலும், ஏற்கனவே மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் துவங்கியபிறகு இந்த நடைமுறையை ரத்து செய்வது முறையாக இருக்காது என்பதால் ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி மனுதாரருக்கு மாணவர் சேர்க்கை வழங்க உத்தரவிட்டார்.

மேலும், குழப்பமான முறையில் நுழைவு தேர்வு நடத்தியது குறித்து வேதனை தெரிவித்த நீதிபதி, எதிர்காலத்தில் தகுதியான மாணவர்கள் பாதிப்பதை தவிர்க்கும் வகையில் குழப்பங்கள் ஏதும் இல்லாமல் தேர்வை நடத்த வேண்டும் என சென்னை கணிதவியல் கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.