உ.பி., கூட்டு பலாத்கார விவகாரம் பொய் புகார் என போலீஸ் விளக்கம்| Dinamalar

புதுடில்லி, உத்தர பிரதேசத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் பெண், பொய் புகார் அளித்து நாடகம் ஆடுவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

உத்தர பிரதேசம் காஜியாபாத் ஆஷ்ரம் சாலை ஓரத்தில் சாக்கு மூட்டையில் ஒரு பெண் மயங்கிய நிலையில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சென்று அந்தப் பெண்ணை மீட்டு, முதலுதவிக்குப் பின், புதுடில்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.

சித்ரவதை

புதுடில்லியில் வசிக்கும் 36 வயதான அந்தப் பெண் சமீபத்தில், உத்தர பிரதேசத்தின் காஜியாபாதில் வசிக்கும் சகோதரர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பும்போது, ஐந்து பேர் அவரை காரில் கடத்திச் சென்று, இரண்டு நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பலாத்காரம் செய்ததாகவும், தன் பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியை செலுத்தி சித்ரவதை செய்ததாகவும் புகார் செய்தார்.

போலீசார் தீவிரமாக விசாரித்து நான்கு பேரை கைது செய்தனர். இதற்கிடையில், புதுடில்லி மகளிர் ஆணய தலைவர் ஸ்வாதி மாலிவால், பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 21ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய, உ.பி., போலீசுக்கு உத்தரவிட்டார்.

கைது

இந்நிலையில், உத்தர பிரதேச டி.ஜி.பி., பிரவீன் குமார் கூறியதாவது:

கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படும் பெண்ணுக்கும், அவர் குற்றம் சாட்டியுள்ள ஐந்து பேருக்கும் இடையே சொத்துப் பிரச்னை உள்ளது.

மேலும், கடத்தப்பட்டதாக கூறப்படும் இரு நாட்களும், அவர் தன் ஆண் நண்பர்களுடன் இருந்துள்ளதையும் கண்டுபிடித்து விட்டோம்.

அவரை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி, சாலையோரத்தில் வைத்து விட்டு, போலீசுக்கு தகவல் கூறியதும் அந்தப் பெண்ணின் நண்பர்கள்தான்.

புதுடில்லி மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்களும், அந்தப் பெண்ணுக்கு பிறப்புறுப்பில் எந்தக் காயமும் இல்லை என அறிக்கை அளித்துள்ளனர்.

தன் சொந்த பிரச்னையில் ஐந்து ஆண்கள் மீதும் பொய் புகார் கொடுத்துஉள்ளார்.

அவருக்கு உதவியாக இருந்த அந்தப் பெண்ணின் மூன்று ஆண் நண்பர்களை கைது செய்து விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.