ஒன் பை டூ

கோவை செல்வராஜ், செய்தித் தொடர்பாளர், ஓ.பி.எஸ் அணி

“நியாயமான கேள்வி. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில், அம்மாவை வாகனத்திலிருந்து கீழே தள்ளிய பிறகு சசிகலா அம்மையாரும், அவரின் குடும்பத்தினரும்தான் அம்மாவைப் பாதுகாத்தனர். அ.தி.மு.க அப்போது ஜெ-ஜா அணிகளாகப் பிரிந்து, தனித்தனியாக தேர்தலைச் சந்திக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது அம்மாவுக்குத்தான் பெருவாரியான தொண்டர்களின் ஆதரவு இருந்தது. அம்மாதான் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்கிற நிலையும் ஏற்பட்டது. அதற்குப் பிறகு சசிகலாதான், ஜானகி அம்மையாரை நேரில் சந்தித்துப் பேசினார். முடிவில், ஜானகி அம்மையார் பெருந்தன்மையாக கட்சியை அம்மாவுக்கு விட்டுக்கொடுத்தார். அதனால், அன்று இரு அணிகளும் ஒன்று சேர சசிகலா முயற்சி எடுத்தார் என்பதே உண்மை. அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்களே அதை ஒப்புக்கொள்வார்கள். இன்று அ.தி.மு.க-வில் முக்கியப் பொறுப்பிலிருக்கும் அனைவரும் சசிகலாவால் அடையாளம் காணப்பட்டவர்கள்தான். எடப்பாடி உட்பட முன்னாள் அமைச்சர்கள் பலரும் சசிகலா அம்மையாரால் பதவிக்கு வந்தவர்கள்தான். அதனால், ஆளுமைமிக்க சசிகலா அம்மையாரால் மட்டுமே தற்போது அனைவரையும் ஒன்றிணைக்க முடியும் என்பதுதான் உண்மை.’’

கோவை செல்வராஜ், சிவசங்கரி

சிவசங்கரி, செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க

“அபத்தமானது. அம்மா உயிரோடு இல்லை என்கிற தைரியத்தில் இப்படிச் சொல்கிறார். ஆனால், அப்போதிருந்த மூத்த அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டுப் பேசியிருக்கிறார். சட்டரீதியாக எல்லா வகையிலும் முயன்று தோற்றுப்போய், தொண்டர்களின் ஆதரவும் இல்லாமல் இருப்பதால்தான் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார். அன்று அம்மாவுக்கு மக்கள் செல்வாக்கும், தொண்டர்களின் ஆதரவும் இருந்தன. தலைவரின் மறைவுக்குப் பிறகு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 27 தொகுதிகளில் வெற்றிபெறச் செய்தார் அம்மா. அதனால்தான், ஜானகி அம்மையார் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, கணவரின் கட்சி வீணாகிவிடக் கூடாது என்று அம்மாவிடம் கட்சியை ஒப்படைத்தார். அம்மாவின் வெற்றிதான் இணைப்புக்குக் காரணமே தவிர சசிகலா அல்ல. அம்மா உயிரோடு இருக்கும் வரையில் கட்சியில் எந்தப் பொறுப்பும் சசிகலாவுக்கு வழங்கப்பட்டதில்லை. எந்தவித அரசியல் அதிகாரத்தையும் கொடுக்காமல், இருக்கிற இடம் தெரியாமல்தான் சசிகலாவை வைத்திருந்தார். உண்மை இப்படியிருக்க, இவர்தான் ஜெ-ஜா அணிகளை ஒன்றிணைத்தார் எனச் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. முதலில், அ.தி.மு.க-வுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.