சிறுமி தற்கொலை வழக்கு; போலீஸ் ஏட்டுக்கு ஆயுள்: கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

சிறுமி தற்கொலை வழக்கு; போலீஸ் ஏட்டுக்கு ஆயுள்: கிரைம் ரவுண்ட் அப்

தட்சிண கன்னடா: பணம் கேட்டு தனக்கு தொல்லை கொடுத்ததால், தற்கொலை செய்து கொண்ட சிறுமி வழக்கில், மாவட்ட ஆயுதப்படை பிரிவு ஏட்டுக்கு, ஆயுள் தண்டனை விதித்து, ‘போக்சோ’ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தட்சிண கன்னடா, மங்களூரு பாஜ்பே சித்தார்த்தா நகரை சேர்ந்தர் பிரவீன் சலியன், 35. மாவட்ட ஆயுதப்படை பிரிவில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். 2015ல், முகநுாலில் 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நீண்ட நாட்களாக இருவரும் முகநுாலில் பேசிக் கொண்டிருந்தனர்.

சிறுமியை காதலிப்பதாக கூறி முகநுால், சமூக வலைதளங்களில் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். திடீரென ஆபாசமாக பேச தொடங்கியுள்ளார்.

தனக்கு 1 லட்சம் ரூபாய் ரொக்கம் அல்லது அதே மதிப்பில் தங்கம் வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த அச்சிறுமி, 2015 ஜூன் 10ல், தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன், சிறுமி எழுதி வைத்திருந்த கடிதத்தில், தன் மரணத்துக்கு பிரவீன் சாலியன் தான் காரணம் என குறிப்பிட்டு, அவரது மொபைல் போன் எண்ணையும் எழுதியிருந்தார். இது தொடர்பாக, விசாரணை நடத்திய உல்லால் போலீசார், பிரவீன் சலியனை கைது செய்தனர். இந்த வழக்கு, போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி மங்சுளா இட்டி முன் நடந்தது.

பிரவீன் சலியன் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும்; மேலும், மூன்று ஆண்டுகள் சிறை, 1,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஓரின காதல் விவகாரம்; தோழியை தாக்கிய கல்லுாரி மாணவி

தாவணகரே : ஓரின காதல் விவகாரத்தில் தோழி, வேறு ஒரு பெண்ணுடன் பேசியதால், ஆத்திரம் அடைந்த கல்லுாரி மாணவி இரும்பு தடியால், தோழியை தாக்கினார்.

தாவணகரேயின் பிரபல தனியார் கல்லுாரியில் படித்து வருபவர்கள் லாசி, 21; ஸ்னேகா, 21. இவர்கள் இருவரும் சிறுவயது முதலே தோழிகளாக உள்ளனர். அதோடு இருவரும் ஓரின காதல் வயப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஸ்னேகா சில நாட்களாக மற்றொரு சக மாணவியுடன் சகஜமாக பழகி வந்தார். இதற்கு லாசி எதிர்ப்பு தெரிவித்தார். அவருடன் பேச கூடாது என தடை விதித்தார் ஆனாலும் ஸ்னேகா, அந்த மாணவியுடன் பேசுவதை நிறுத்தவில்லை.

நேற்று தாவணகரே சாந்தி நகரில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த இரும்பு தடியால் ஸ்னேகாவை, லாசி தாக்கினார். பின் அவர், தன் கையை அறுத்து கொண்டார். இதில் படுகாயம் அடைந்த இருவரையும், அங்கிருந்தர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மனைவியை கொன்ற கணவன் கைது

கூடலுார் : நீலகிரி மாவட்டம் கூடலுார் புத்துார்வயல் பகுதியைச் சேர்ந்தவர் மோகனன் 55; விவசாயி.மனைவி உஷா 51, இவர் 19ம் தேதி முதல் காணவில்லை. கூடலுார் போலீசார்விசாரணை மேற்கொண்டனர். வனப்பகுதியில் உஷாவின் உடல் கிடந்தது நேற்று தெரியவந்தது.


போலீசார் உடலை ஆய்வு செய்ததில் அவர் கொலை செய்யப்பட்டு இறந்தது தெரியவந்தது. விசாரணையில் உஷாவை கணவர் மோகனன் கொலை செய்தது தெரியவந்தது.மோகனனை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பேத்தியை கொன்று பாட்டி தற்கொலை

பீதர், கமலாநகரின், கதகாவ் கிராமத்தில் வசித்தவர் நாகம்மா, 70. மருமகளை கொலை செய்து, கைதாகி சிறைக்கு சென்ற மூதாட்டி, முந்தைய வாரம் விடுதலை ஆனார். மகனுடன் மனஸ்தாபம் ஏற்பட்டதால், எட்டு மாத பேத்தி பல்லவியை, நேற்று முன் தினம் இரவு கிணற்றில் போட்டு கொலை செய்துவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சொத்து தகராறில் அண்ணனை வெட்டிய தம்பி உள்ளிட்ட 11 பேருக்கு வலை

வில்லியனுார் : சொத்து தகராறில் அண்ணனைவெட்டி, கை,கால்களை கட்டி போலீஸ் ஸ்டேஷன் முன் வீசிச் சென்ற தம்பி உள்ளிட்ட 11 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

latest tamil news

கரிக்கலாம்பாக்கம் அடுத்த தனிக்குப்பத்தை சேர்ந்தவர் துரைசாமி மகன்கள் துளசிநாதன்,47; வெங்கடேசன்,45; இருவருக்கும் இடையே சொத்து பிரச்னை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 19ம் தேதி மதியம் வெங்கடேசன், அவரது மனைவி சத்தியா உள்ளிட்ட 11 பேர் கொண்ட கும்பல், துளசிநாதனை தாக்கி, கத்தியால் வெட்டினர்.

தப்பியோட முயன்ற துளசிநாதனை பிடித்து கயிற்றால் கை, கால்களை கட்டிய காரில் ஏற்றிச் சென்று மங்கலம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த துளசிநாதனை போலீசார் மீட்டு கரிக்கலாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து துளசிநாதன் அளித்த புகாரின் பேரில், மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகசத்யா கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிந்து வெங்கடேசன் உள்ளிட்ட 11 பேரை தேடிவருகின்றனர்.

ரூ.8 கோடி பறிமுதல் 4 பேர் சிக்கினர்

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில், தொழிலதிபர்களின் படுக்கை மற்றும் காரில் இருந்து 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நான்கு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

latest tamil news

மேற்கு வங்கத்தின் ஹவுரா நகரில் வசிக்கும் தொழிலதிபர்களான சைலேஷ் பாண்டே, அரவிந்த் பாண்டே, ரோஹித் பாண்டே மூவரும் உடன்பிறந்த சகோதரர்கள். இவர்கள் சில வங்கிகளில் தொழிற்கடன் வாங்கிஇருந்தனர்.

இந்நிலையில், வங்கியில் இருந்த அந்த பணத்தில் இருந்து கோடிக்கணக்கில் பணம் எடுத்தனர். இதையடுத்து, வங்கி அதிகாரிகள் சட்டவிரோதமாக பணம் எடுத்துள்ளனர் என போலீசுக்கு தகவல் அளித்தனர். அன்று நள்ளிரவே மூவரும் வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

காரில் மறைத்து வைத்திருந்த 2 கோடி மற்றும் வீட்டின் படுக்கைக்குள் ஒளித்து வைத்திருந்த 6 கோடி என மொத்தம் 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வங்கி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், சகோதரர்கள் மூவர் மற்றும் அவர்களின் பங்குதாரர் ஒருவர் என நான்கு பேரை நேற்று கைது செய்தனர். அவர்களின் வங்கிக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

ஆசிரியரின் தலையை துண்டித்து மியான்மர் ராணுவம் கொடூரச் செயல்

யாங்கூன் : மியான்மரில், ராணுவத்துக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, பள்ளி ஆசிரியர் ஒருவரின் தலையை துண்டித்து, ராணுவத்தினர் வாசல் கதவில் தொங்கவிட்டது, பொதுமக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், தேர்தல் நடைபெற்று ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சி ஆட்சி அமைத்தது.

latest tamil news


ஆனால், கடந்த ஆண்டு பிப்ரவரியில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. மேலும், ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்தி வரும் வெறித் தாக்குதலில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மியான்மரில் மிக்வே மாகாணத்தில் உள்ள தவுங்மையிட் கிராமத்தைச் சேர்ந்த சா டுன் மொய், ௪௬, என்ற பள்ளி ஆசிரியர், ராணுவத்துக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் பணிபுரிந்த பள்ளிக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டார். கடந்த ஓர் ஆண்டாக மூடிக்கிடக்கும் அப்பள்ளியின் முன், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஆசிரியரின் தலை துண்டிக்கப்பட்டது.

பின், அந்த தலையை பள்ளியின் வாசல் கதவில் தொங்கவிட்டு, ராணுவத்தினர் சென்றுவிட்டனர். இந்த கொடூர கொலைச் சம்பவத்தால், மியான்மர் நாட்டு மக்கள் பீதியில் உள்ளனர்.

பெண் பாலியல் கொடுமை; முதியவருக்கு 17 ஆண்டு

சென்னை : குடிபோதையில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு, 17 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, அண்ணாநகர் பகுதியில், திருமணமான 30 வயது பெண் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள், 2015ல் குடிபோதையில் அத்துமீறி நுழைந்த, அமைந்தகரையை சேர்ந்த 60 வயது முதியவரான முருகானந்தம், அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். முருகானந்தத்தை கைது செய்தனர். பின், ஜாமினில் வெளியில் வந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை, அல்லிகுளத்தில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.ஹெச்.முகமது பாரூக் முன் நடந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆரத்தி பாஸ்கரன் ஆஜரானார்.

நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு:

முதியவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அத்துமீறி நுழைந்ததற்காக, 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. அபராதமாக, 10 ஆயிரம் ரூபாய் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை, ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.