காங்கிரஸ் கனவை கரைத்த ஆம்ஆத்மி, பா.ஜ இமாச்சலில் கரை சேருவது யார்? மும்முனை போட்டியால் அனல் பறக்கும் தேர்தல் களம்

1990ம் ஆண்டுக்கு பிறகு இமாச்சலபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் எந்த ஒரு கட்சியும் 2ம் முறையாக ஆட்சிக்கு வந்ததில்லை. அங்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ இடையே தான் போட்டி. இப்போது 3 முனை போட்டியாக மாறிவிட்டது. களத்தில் முதல்முறையாக ஆம்ஆத்மி குதித்து இருக்கிறது. இந்த தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஆம்ஆத்மியின் வருகை களநிலவரத்தையே மாற்றி போட்டு இருக்கிறது. கடைசியாக நடந்த இடைத்தேர்தல்களில் கூட காங்கிரஸ் தான் வெற்றி பெற்றது.

2021ல் நடந்த மாண்டி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரதீபா சிங் அமோக வெற்றி பெற்றார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் வீர்பத்ரசிங் மனைவி. 2019 மக்களவை தேர்தலில் சுமார் 4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வென்று பா.ஜ வசம் இருந்த இந்த தொகுதி தற்போது காங்கிரஸ் வசம் மாறி இருக்கிறது. அதே போல் சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் நடந்த பதேபூர், அர்கி, ஜூபால் கோத்கி தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது. சரியாக ஒரு ஆண்டுக்கு முன்னர் நடந்த தேர்தல் முடிவுகள் இப்படி இருக்கும் போது 2022 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை காங்கிரசுக்கு ஏற்பட்டது. ஆனால் ஆம்ஆத்மி உள்ளே வந்தது.

தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மார்ச் மாதத்தில் மட்டும் 48 தேர்தல் பிரசார பேரணிகளை நடத்தி ஒவ்வொரு வார்டு வரையிலும் உள்ள பெரும்பகுதி காங்கிரஸ் பிரமுகர்களை ஆம்ஆத்மி பக்கம் இணைத்து விட்டார். அதே போல் பா.ஜ பிரமுகர்களையும் இணைத்ததால் பிரச்னை வந்தது. சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் மே 30ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இதனால் இமாச்சலில் ஆம்ஆத்மி வேகத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டுவிட்டது.

ஆம்ஆத்மிக்கு தடை போட்டாலும் காங்கிரசை கரைக்கும் பணியை பா.ஜ கைவிடவில்லை. தங்கள் பங்கிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பவன்குமார் காஜல் மற்றும் லக்வீந்தர்சிங் ரானா ஆகியோரை இழுத்து பா.ஜவில் இணைத்தனர். இதில் காஜல் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு தலைவர். அதே வேகத்தில் கடந்த செப்டம்பர் 28ம் தேதி இமாச்சல் காங்கிரஸ்செயல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஹர்ஷ் மகாஜனை தங்கள் பக்கம் இழுத்து மீண்டும் காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுத்து உள்ளது பா.ஜ. கட்சி ஆட்டம் கண்டு வருவதை கண்ட காங்கிரஸ் அதிர்ந்து போய் விட்டது.

வேறு வழியில்லாமல் இமாச்சலில் 6 முறை முதல்வராக இருந்து சமீபத்தில் மரணம் அடைந்த வீர்பத்ரசிங்கின் இரண்டாவது மனைவியும், 2021ல் மாண்டி மக்களவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவருமான பிரதீபா சிங்கிற்கு கடந்த ஏப்ரல் 26ம் தேதி மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை அளித்து புதிய ரத்தம் பாய்ச்சியது. இவரது மகன் விக்ரமாதித்ய சிங் தற்போது சிம்லா புறநகர் தொகுதி எம்எல்ஏ. காங்கிரசுக்கு ஏற்பட்ட சரிவை தடுத்து நிறுத்த பிரதீபா சிங் முயற்சி மேற்கொள்கிறார். இன்னொரு பக்கம் காங்கிரசில் இருந்து ஆட்களை இழுத்தாலும் பா.ஜவும் ஆட்டம் கண்டுதான் இருக்கிறது. அதற்கு காரணம் இடைத்தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி.

தற்போது முதல்வராக இருக்கும் ஜெய்ராம் தாக்கூரை இந்த ஆண்டு தொடக்கத்தில் மாற்றி விட்டு ஒன்றிய அமைச்சராக இருக்கும் அனுராக் தாக்கூரை இமாச்சல் முதல்வராக நியமிக்கலாம் என்ற யோசனையும் பா.ஜவுக்கு வந்தது. ஆனால் காலம் கைகூடவில்லை. தேர்தல் நெருங்கி விட்டதால் முதல்வரை மாற்றினால் மக்கள் மனது காங்கிரஸ் பக்கம் பகிரங்கமாக மாறிவிடும் என்று பாஜவுக்கு பயம். தேர்தல்முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு வைத்து இருக்கிறது. அதனால் தான் காங்கிரஸ் கட்சி தற்போது எம்எல்ஏக்களாக உள்ள அத்தனை பேருக்கும் மீண்டும் சீட் வழங்கி இருக்கும் சூழலில் பா.ஜ சார்பில் 11 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு இடம் வழங்கப்படவில்லை. அவர்கள் சுயேச்சையாக களமிறங்கியதால் கடைசி நேர குழப்பம் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் இமாச்சலபிரதேசம் யாருக்கு கை கொடுக்கும் என்பது டிசம்பர் 8ம் தேதி தேர்தல் முடிவில் தெரிந்து விடும்.

2017 தேர்தல் முடிவுகள்
கட்சிகள்    இடம்    சதவீதம்    மொத்த வாக்குகள்
பா.ஜ    44    48.8%    18,46, 432
காங்கிரஸ்    21    41.7%    15,77,450
மார்க்சிஸ்ட்    1    1.5%    55,558

6 முதல்வர்கள் தான்
இமாச்சல் மாநிலத்தில் இதுவரை 6 பேர் மட்டுமே முதல்வராக இருந்துள்ளனர். 1952ல் இருந்து இப்போது வரை மக்கள் 6 பேரை மட்டுமே மீண்டும் மீண்டும் தேர்வு செய்துள்ளனர். காங்கிரஸ் சார்பில் 3 பேர், பா.ஜ சார்பில் 3 பேர்.
1. யஷ்வந்த்சிங் பார்மர் (காங்கிரஸ்)    1.1952 மார்ச் 8 முதல்- 1977 ஜனவரி 28 வரை
2. தாக்கூர் ராம்லால் (காங்கிரஸ்)    1.1977 ஜனவரி 28 முதல் 1977 ஏப்ரல் 30 வரை
                                                                       2. 1980 பிப்ரவரி 14 முதல் 1983 ஏப்ரல் 7 வரை
3. சாந்தகுமார்(ஜனதா, பா.ஜனதா)    1. 1977 ஜூன் 22 முதல் 1980 பிப்ரவரி 14 வரை
                                                                             2. 1990 மார்ச் 5 முதல் 1992 டிசம்பர் 15 வரை
4. வீர்பத்ரசிங்(காங்கிரஸ்)    1.1983 ஏப்ரல் 8 முதல் 1990 மார்ச் 5 வரை
    2. 1993 டிசம்பர் 3 முதல் 1998 மாா்ச் 23 வரை
    3. 2003 மார்ச் 6 முதல் 2007 டிசம்பர் 30 வரை
    4. 2012 டிசம்பர் 25 முதல் 2017 டிசம்பர் 27 வரை
5. பிரேம்குமார் துமால்(பா.ஜ)    1.1998 மார்ச் 24 முதல் 2003 மார்ச் 5 வரை
    2. 2007 டிசம்பர் 30 முதல் 2012 டிசம்பர் 25வரை
6. ஜெய்ராம் தாக்கூர்(பா.ஜ)    1. 2017 டிசம்பர் 27 முதல் இப்போது வரை

* அதெல்லாம் மேலிடம் பாத்துக்கும்…
இமாச்சலில் பா.ஜ மீண்டும் வென்றால் நீங்கள் தானே அடுத்த முதல்வராமே என்று கேட்டதற்கு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் பதில்: அடுத்த முதல்வர் யார் என்பதை மேலிடம் பார்த்துக்கொள்ளும். இமாச்சல் மட்டுமல்ல எந்த மாநிலம் என்றாலும் முதல்வர் யார் என்பதை மேலிடம் தான் முடிவு செய்யும். இப்போதைக்கு ஒரே குறிக்கோள் காங்கிரஸ் கட்சி அங்கு ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதுதான். உபி, உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் வென்று விடலாம் என்று காங்கிரஸ் கனவு கண்டது. எங்கும் காங்கிரசை காண முடியவில்லை. டெபாசிட் இழந்து கிடக்கிறார்கள். இமாச்சலில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம். கடந்த முறையை விட இந்த தேர்தலில் பா.ஜ கூடுதல் இடங்களை கைப்பற்றும் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* வேட்பாளர்கள் ரெடி
இமாச்சல் தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் செவ்வாய்கிழமை இறுதிநாள். இதையடுத்து கட்சிகள் வேட்பாளர்களை போட்டி போட்டு அறிவித்து வருகிறார்கள். ஆம்ஆத்மி முந்திக்கொண்டு கடந்த செப்டம்பர் 20ம் தேதி 4 வேட்பாளர்களை அறிவித்தது. அக்டோபர் 20ம் தேதி 54 பேர் பட்டியலை வெளியிட்டது. மார்க்சிஸ்ட் செப்டம்பர் 22ல் 11 பேரையும், செப்டம்பர் 24ல் 2 பேரையும், அக்டோபர் 18ல் 11 பேர் பட்டியலையும் வெளியிட்டது. காங்கிரஸ் கட்சி அக்டோபர் 18ல் 46 பேர், 20ல் 17 பேர், 22ல் 5 பேர் பட்டியலை வெளியிட்டது. பா.ஜ அக்டோபர் 19ல் 62 பேர் பட்டியலையும், அக்டோபர் 20ல் 6 பேர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

* 2.68 லட்சம் வாக்குகளில் ஆட்சியை இழந்த காங்கிரஸ்
2017 சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 37,98,176 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் காங்கிரஸ் கட்சி பா.ஜவை விட 2,68,982 வாக்குகள் தான் குறைவாக பெற்று இருந்தது. ஆனால் இரு கட்சிக்கும் இடையே 23 இடங்கள் வித்தியாசம் ஏற்பட்டது. ஆட்சியும் பறிபோய் விட்டது. இந்த தேர்தலில் ஆம்ஆத்மியும் களம் இறங்கி இருக்கிறது. அப்படி இருக்கும் போது மார்க்சிஸ்ட், பகுஜன் சமாஜ், இமாச்சல் லோகித் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  வழக்கம் போல் தனித்துதான் போட்டியிடுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.