கட்டட பணி தொடங்காத மதுரை எய்ம்ஸ்-க்கு தலைவரை நியமித்த மத்திய அரசு – திமுக ரியாக்‌ஷன் என்ன?!

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவர வேண்டும் என அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்கள். இந்தநிலையில், கடந்த 2018-ம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி ஆரம்பித்தது. அந்தவகையில், மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது. ரூ.1,264 கோடி மதிப்பில், சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் மோடியால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய போது

பின்னர் கூடுதல் அறைகள், படுக்கைகள் கணக்கிடப்பட்டு 2020ம் ஆண்டு இறுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்ந்துவிட்டதாக கூறப்பட்டது. அடிக்கல் நாட்டப்பட்ட பின்னர் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்றது. பின்னர், மருத்துவமனைக்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ இடங்களில் தேர்வான மாணவர்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

அடிக்கல் நாட்டி இரண்டரை ஆண்டுகள் கழித்து ஜப்பான் நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் கடந்த 2021ம் ஆண்டு மார்ச்சில் செய்யப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக ஜப்பான் நிறுவனம் தனது நிதியை முழுவதும் ஒதுக்கீடு செய்து இருக்கிறது. ஆனால் மத்திய அரசு அதன் நிதியை இன்னும் ஒதுக்கீடு செய்யாமல் இருக்கிறது என்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

ஜேபி நட்டா

இந்தநிலையில் இரண்டு நாள் பயணமாக கடந்த மாதம் மதுரை வந்த பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். ஜே.பி.நட்டாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, கோப்புகளை இறுதி செய்யும் பணிகள் 95 சதவிகிதம் முடிந்ததாக கூறினேன் என்று விளக்கமளித்தார்.

இதேபோல், கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு கொண்டுவந்துவிட்டேன்” என்று ஒற்றை செங்கலை காண்பித்து வாக்கு சேகரித்தார்.

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் செங்கல் என்று வாக்கு சேகரித்த உதயநிதி

இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போன எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதுரையில் உள்ள வி.என். நரம்பியல் சிறப்பு மருத்துவமனையின் தலைவராக உள்ள நாகராஜன் வெங்கட்ராமனை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமனம் செய்து மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “மத்திய அரசு வடமாநிலங்களில் இதுபோன்ற செயலை செய்து வந்தது. இப்போது தென்மாநிலத்திலும் இந்த வேலையை ஆரம்பித்துவிட்டது. கட்டாத மருத்துவமனைக்கு தலைவராக நியமிக்கப்பட்டவர் என்ன செய்யப் போகிறார்?. இதுபோன்ற பதவி நியமனங்கள் எஸ்ம்ஸ்-க்கு மட்டுமில்லை எல்லா இடங்களிலும் இருக்கிறது. இதுபோன்ற பிரச்னைகள் மூலமாக மக்களை திசை திருப்பும் பணியை மத்திய அரசு செய்கிறது. முக்கிய பிரச்னையாக தற்போது வறுமை ஒழிப்பில் இந்தியா 107வது இடத்தில் இருக்கிறது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

டாலர் மதிப்பு அதிகரித்து வருகிறது. 5.60 கோடி பேர் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைகள் வரிசை கட்டி நிற்கும் போது இதுபோன்று தலைவர் நியமித்தோம் என்று சொல்வது திசை திருப்பும் ஒன்றாக தான் இருக்கிறது. தலைவர் நியமனம் மூலம் கூடுதல் செலவு தான் ஏற்படும். கிட்டதட்ட மாதம் தோறும் 10 லட்சம் ரூபாய் வெட்டியாக செலவாகும். இது எய்ம்ஸ்க்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து தான் கொடுக்கப்படும். எனக்கு தெரிந்து இதுவரையில் கட்டாத ஒரு மருத்துவமனைக்கு தலைவர் நியமித்ததாக நான் கேள்விப்படவில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.